பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு, இந்திய தண்டனைச் சட்டம் உள்ளிட்ட சில சட்டங்களின் பெயரை மாற்றுவது மற்றும் சில திருத்தங்களைக் கொண்டுவருவதற்கான மசோதாக்களை அறிமுகம் செய்திருக்கிறது. இது தொடர்பான மசோதாக்களை நாடாளுமன்றத்தில் நடப்பு மழைக்காலக் கூட்டத்தொடரின் இறுதி நாளில் மத்திய அரசு தாக்கல் செய்தது. அதாவது, நமது நாட்டில் வழக்குகள் பதிவுசெய்யப்படும் முறை, விசாரணை நடைமுறை உள்ளிட்டவற்றில் மாற்றங்கள் கொண்டுவரும் வகையில் மூன்று சட்டத் திருத்தங்கள் மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவால் நேற்று (ஆக 11) தாக்கல் செய்யப்பட்டது.
மூன்று சட்டத்திருத்தங்கள்
1. IPC எனப்படும் இந்திய தண்டனைச் சட்டம் – பாரதிய நியாய சன்ஹித
2. Criminal Procedure Code எனப்படும் இந்திய குற்றவியல் சட்டம் – பாரதிய சக்ஷய
3. இந்திய ஆதாரச் சட்டம் – பாரதிய நகரிக் சுரக்ஷ சன்ஹித
இவ்வாறு பெயர் மாற்றம் செய்யவிருக்கின்றனர்.

மசோதாக்களை மக்களவையில் தாக்கல் செய்து பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ‘1860 முதல் 2023 வரை நாட்டின் குற்றவியல் நீதி அமைப்பு ஆங்கிலேயர்கள் இயற்றிய சட்டங்களின்படி செயல்பட்டது. ஆங்கிலேயர்களால் கொண்டுவரப்பட்ட மூன்று சட்டங்களின் பெயர்களை மாற்ற முடிவுசெய்யப்பட்டிருக்கிறது.
மூன்று மசோதாக்களும் நாடாளுமன்றக் குழுக்களின் பரிசீலனைக்கு அனுப்பப்படும். அந்த மூன்று சட்டங்களும் மாற்றப்பட்டு நடைமுறைக்கு வந்தால், நாட்டின் குற்றவியல் நீதி அமைப்பில் பெரிய மாற்றம் வரும். புதிய குற்றவியல் தண்டனை சட்டத்தின்படி, குற்றவாளிகள் தண்டிக்கப்படுவது 90%க்கு மேல் அதிகரிக்க வேண்டும் என்ற இலக்கை நாங்கள் நிர்ணயித்திருக்கிறோம். அதனால்தான், 7 ஆண்டுகள் அல்லது அதற்கும் மேற்பட்ட சிறைத் தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ள, அனைத்து வழக்குகளிலும் தடயவியல் குழு குற்றம் நடந்த இடத்துக்குச் செல்வது கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. பாரதிய நியாய சன்ஹித மூலம், தேசத்துரோகம் போன்ற சட்டங்களை ரத்துசெய்கிறோம்’ என்றும் தெரிவித்தார்.
அடுத்தகட்டமாக மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட வேண்டும். ஆனால், மழைக்கால கூட்டத்தொடர் நேற்றுடன் நிறைவுபெறுகிறது. எனவே, அடுத்த கூட்டத்தொடரில்தான் உரிய விவாதத்துக்குப் பின்னர் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு சட்ட வடிவம் பெறும் எனத் தெரிகிறது.
இந்த நிலையில், மேற்குறிப்பிட்ட சட்டங்களுக்கு ஆரம்ப நிலையிலேயே தமிழக அரசு தனது எதிர்ப்பை பதிவுசெய்திருக்கிறது. இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில், “புதிதாக கொண்டுவரப்படும் சட்டத்தில் ’இந்தியா’ எனக் குறிப்பிடப்பட்டிருப்பதை ’பாரதிய’ என மாற்றும் மசோதாவுக்கு கடும் கண்டனங்கள். இவ்வாறு ’பாரதிய’ என இந்தியில் மாற்றுவது மத்திய பா.ஜ.க அரசின் மொழி சர்வாதிகாரத்தின் கோரத்தாண்டவத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. இந்திய ஒற்றுமையின் அடித்தளத்தையே அவமதிக்கும் வகையில் மூன்று புதிய சட்டங்கள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன. இதன் மூலம் பன்முகத்தன்மையின் அடிப்படையை சிதைக்க பா.ஜ.க அரசு முயற்சி செய்கிறது. தமிழ் குறித்து இனி ஒரு வார்த்தை பேச பிரதமர் மற்றும் பா.ஜ.க-வுக்கு தார்மீக உரிமை இல்லை. வரலாற்றில் எத்தனையோ அடக்குமுறைகளால் புடம் போடப்பட்டு, அடக்குமுறைகளை எதிர்ப்பதில் முன்கள வீரர்களாக தமிழகமும், திராவிட முன்னேற்ற கழகமும் திகழ்கின்றன.

இந்தி திணிப்பு எதிர்ப்புப் போராட்டங்கள், எங்கள் மொழி அடையாளத்தைக் காப்பது என்ற நோக்கில் இந்தித் திணிப்பின் கொடும் புயலை எதிர்கொண்டவர்கள் நாங்கள். மீண்டும் அசைக்க முடியாத அளவில் நாங்கள் உறுதியுடன் அதை எதிர்கொள்வோம். இந்தி காலனி ஆதிக்கத்துக்கு எதிரான தீ மீண்டும் ஒருமுறை பரவுகிறது. எங்கள் அடையாளத்தை அழித்து இந்தியை முன்னிறுத்தும் பா.ஜ.க-வின் முயற்சிகள் உறுதியோடு எதிர்க்கப்படும்“ என்று பதிவிட்டிருக்கிறார்.
இதற்கு முன்னதாக, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க-வை வீழ்த்தும் நோக்கில் 26 கட்சிகள் ஒன்றிணைந்து, இந்தியா என பொருள்படும் வகையில் I.N.D.I.A என்ற கூட்டணியை உருவாக்கியிருக்கிறது. இது தொடர்பான அறிவிப்பு வெளியானது முதலே பா.ஜ.க கடும் எதிர்வினையாற்றி வருகிறது. அஸ்ஸாம் மாநில முதலமைச்சரான ஹிமந்த பிஸ்வா சர்மா, இந்தியாவின் பெயரை ‘பாரத்’ என மாற்ற வேண்டும் என வலியுறுத்தியிருந்தார். பா.ஜ.க-வைச் சேர்ந்த பல்வேறு தலைவர்களும் இந்தக் கோரிக்கையை முன்வைத்தனர். இந்த நிலையில்தான் இந்திய தண்டனைச் சட்டம் உள்ளிட்ட மூன்று சட்டங்களையே, ‘பாரத்’ என தொடங்கும் பெயர் கொண்டு மாற்றி அமைக்கும் புதிய மசோதாக்களை நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா தாக்கல் செய்திருக்கிறார்.

இது தொடர்பாக நம்மிடம் பேசிய தி.மு.க செய்தித் தொடர்பு செயலாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், “அவர்களின் தோல்வி மனநிலைதான் இது. இந்தியா வெல்லும் என்று சொல்லும்போது அவர்களால் மறுத்துச் சொல்ல முடியவில்லை. ஏனென்றால் இந்தியா தோற்கும் என்று சொல்ல முடியாதல்லவா. அதேபோல் இந்தியா உடைந்து சிதறும் என்றும் பேச முடியாது. இதையெல்லாம் புறக்கணிக்கத்தான் NDA என்பதிலிருந்துதான் I.N.D.I.A – எடுத்துக்கொண்டார்கள் என்கிறார். எனக்குத் தெரிந்து I.N.D.I.A -க்குள் NDA அடங்குமே தவிர NDA- க்குள் எப்படி அடங்கும்.
I.N.D.I.A – என்கிற வார்த்தை சாமனிய மக்களிடம் அந்தக் கூட்டணி பெயர் சென்று சேர்ந்திருக்கிறது. இதை புறம் தள்ளுவதற்கு பாரதிய, பாரத என்று சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். I.N.D.I.A – என்று இவர்கள் வைத்திருப்பதால் பாரதம் என கட்டமைக்க விரும்புகிறார்கள். அதனால்தான் நாடாளுமன்றத்தில் பேசும்போதுகூட, தி.மு.க வடநாட்டை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதுபோல் பேசுகிறார்கள். ஒரு காலத்தில் திராவிட நாடு கோரிக்கை வைத்தபோது இந்தியா என்று சொன்னால் ஏற்பட்ட தாக்கத்தைவிட தமிழ்நாடு என்று சொன்னபோது இனிப்பாக இருந்தது. ஆனால், இன்றைக்கு இந்தியாவைக் கட்டிக்காக்க முதலமைச்சரால்தான் முடியும் என்றுதான் அமைச்சர் சொல்கிறார். இங்கு எங்கு பிரிவினைவாதம் வருகிறது.

இதன் சூட்சமம் எங்கு ஆரம்பிக்கிறது என்றால் இதுவரைக்கும் 37% க்கு மேல் பா.ஜ.க வாக்கு வாங்கவில்லை. அவர்கள் எப்படி வெற்றி பெற்று வந்தார்கள் என்றால், மீதமிருக்கும் 67%, பிரிந்து இருந்த நிலையில் அதைப் பயன்படுத்தினார்கள். ஆனால், இன்று எல்லோரும் ஒன்று சேர்ந்து நிற்கும்போது ஒரு பயம் வருகிறது. அதை உடைக்க வேண்டும், ஒரு நம்பிக்கையைப் போக்க வேண்டும். அதற்காகச் செய்யும் ஒரு கபடநாடகம்தான் இது. அதோடு பாரதிய எனும்போது பாரதிய ஜனதா கட்சி என்பதன் பெயரும் வருகிறது. இப்போது கூட்டணி நாடாகிவிட்டது. அவர்கள் கட்சிப் பெயரையாவது நாடாக்கலாமா என்று பார்க்கிறார்கள்” என்றார்.

இதையே ஆமோதித்துப் பேசிய தி.மு.க தகவல்நுட்ப அணி மாநில துணைச் செயலாளர் தமிழ்மாறன், “இது மிகப்பெரிய தவறு. இந்தி மொழி தவிர்த்து மற்ற மொழிகள் பேசுபவர்கள் எல்லாம் முக்கியமில்லை எனபதுபோல்தான் அவர்களின் நிலைப்பாடு இருக்கிறது. இதனால் நாமெல்லாம் இரண்டாம்தர குடிமகன்போல்தான் நடத்துகிறார்கள். இந்த அபாய எச்சரிக்கை மணியை இப்போதே நாம் சுதாரித்துக்கொண்டு, முற்றிலும் இந்தி பேசாத எல்லா மாநில மக்களும் எதிர்க்க வேண்டும். IPC-யே தொடர வேண்டும். நாம் என்னதான் தமிழ் மொழி பற்றாளர்களாக இருந்தாலும் நமக்குள் ஒரு தேசிய உணர்வு இருக்கிறது. இது போன்ற ஒரு நடவடிக்கையின் மூலமாக அதன்மீது இப்போது ஒரு பயம் வருகிறது இல்லையா…” என்கிற கேள்வியை முன்வைக்கிறார் தமிழ் மாறன்.
இது தொடர்பாக நம்மிடம் பேசிய பா.ஜ.க மாநிலச் செயலாளர், எஸ்.ஜி.சூர்யா, ”இந்திய தண்டனைச் சட்டத்தின் (IPC) பெயரை “பாரதிய நியாய சன்ஹித” எனவும், இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் (CRPC) பெயரை “பாரதிய நகரிக் சுரக்ஷா சன்ஹித” எனவும், இந்திய சாட்சிகள் சட்டத்தின் (IEA) பெயரை “பாரதிய சக்ஷய” எனவும் மாற்ற திட்டமிடப்பட்டிருக்கிறது. ஆங்கிலேயர்களால் கொண்டுவரப்பட்ட மூன்று சட்டங்களின் பெயர்களை மாற்றுவதே மத்திய அரசின் நோக்கம். ஆனால், இதிலும் இந்தி திணிப்பு அரசியலை கையிலெடுத்திருக்கிறது தி.மு.க. சட்டத்தின் பெயரை மாற்றுவதால் பா.ஜ.க-வுக்கும், பிரதமர் மோடிக்கும் இனி தமிழ் என்று உச்சரிக்கக்கூட தாா்மீக உரிமை இல்லை. இந்தியை முன்னிறுத்தும் பா.ஜ.க-வின் முயற்சிகளை உறுதியோடு எதிர்ப்போம் என தமிழக முதல்வர் ஸ்டாலின் சொல்கிறார்.
ஜவஹர் ரோஜ்கர் யோஜனா, இந்திரா ஆவாஸ் யோஜனா என காங்கிரஸ் ஆட்சியில் வைக்கப்பட்ட பெயர்கள் எந்த மொழியில் இருந்தது… அப்போது இந்தி திணிப்பு தி.மு.க-வினர் கண்களுக்கு தெரியவில்லையா… அதுவும் குடும்பப் பெயர்களை மட்டுமே முன்னிறுத்தி அப்போது திட்டங்களுக்கு பெயர் வைக்கப்பட்டது. ஆனால், இந்திய அரசியலமைப்பு சட்டத்திலுள்ளபடி மட்டுமே “பாரத்” என்ற பெயரை முன்னிறுத்தி சட்டங்களின் பெயரை மத்திய அரசு மாற்றவிருக்கிறது. அதை எதிர்ப்பது எந்த விதத்தில் நியாயம் என தெரியவில்லை” என்றார்.
Junior vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs