மதுபானப் போத்தல்களில் போலியான ஸ்டிக்கர்களை அடையாளம் காண கையடக்கத்தொலைபேசி செயலியை மேம்படுத்த அறிவுறுத்தல்

மதுபானப் போத்தல்களில் போலியான ஸ்டிக்கர்களை அடையாளம் காண கையடக்கத்தொலைபேசி செயலியை மேம்படுத்தவும் – வழிவகைகள் பற்றிய குழு, இலங்கை மதுவரித் திணைக்களத்துக்கு 

மதுபானப் போத்தல்களில் ஒட்டப்படும் பாதுகாப்பு ஸ்டிக்கர்களில் போலியானவற்றை வாடிக்கையாளர்களும், இலங்கை மதுவரித் திணைக்களத்தின் அதிகாரிகளும் இலகுவில் அடையாளம் காணும் வகையில் தற்பொழுதுள்ள கையடக்கத்தொலைபேசி செயலியை மேம்படுத்துமாறு பாராளுமன்ற வழிவகைகள் பற்றிய குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ பாட்டலி சம்பிகரணவக, பாதுகாப்பு ஸ்டிக்கர் தயாரிப்பு நிறுவனத்துக்குப் பணிப்புரை விடுத்தார்.

கடந்த 24ஆம் திகதி மதுவரித் திணைக்களத்துக்கு கள விஜயத்தை மேற்கொண்டிருந்த இக்குழு, தற்பொழுது சந்தையில் உள்ள மதுபானப் போத்தல்களில் ஒட்டுப்பட்டுள்ள ஸ்டிக்கர்கள் போலியானவையா அல்லது உண்மையானவையா என்பதைக் கண்டறிவதற்கு உரிய பொறிமுறை இல்லாமை குறித்து சுட்டிக்காட்டியிருந்தது. இது குறித்து மேலும் விசாரிக்கும் நோக்கில் வழிவகைகள் பற்றிய குழு அதன் தலைவர் கௌரவ பாட்டலி சம்பிகரணவக்க தலைமையில் (10) பாராளுமன்றத்தில் கூடியது. இக்குழு முன்னிலையில் மதுவரித் திணைக்கள அதிகாரிகளும், பாதுகாப்பு ஸ்டிக்கர் தயாரிப்பு நிறுவனத்தின் பிரதிநிதியும் அழைக்கப்பட்டிருந்தனர்.

மதுபானப் போத்தல்களுக்கு பாதுகாப்பு ஸ்டிக்கர் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தாலும் நாட்டிலுள்ள அனைத்து மதுபானத் தயாரிப்பாளர்களாலும் இது பயன்படுத்தப்படாமை குறித்து குழு அதிருப்தியை வெளியிட்டிருந்தது. குறித்த ஸ்டிக்கர்களைப் பயன்படுத்தாத நான்கு நிறுவனங்கள் இருப்பதாக திணைக்களத்தின் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

இந்தப் பாதுகாப்பு ஸ்டிக்கர்களை அடையாளம் காண்பதற்கான 200 விசேட உபகரணங்கள் கடந்த மார்ச் மாதம் மதுவரித் திணைக்களத்துக்கு வழங்கப்பட்டுள்ளபோதும் அவை இதுவரை பயன்படுத்தப்படாமை குறித்தும் இங்கு தெரியவந்தது. இந்த உபகரணங்களைப் பயன்படுத்தக்கூடிய நிலைமைக்கு ஏற்ற வகையில் தொழில்நுட்ப ரீதியில் மேம்படுத்தி 30/08/2023 திகதியாகும்போது பூரணப்படுத்துமாறும் குறித்த நிறுவனத்துக்கு குழுவின் தலைவர் பணிப்புரை வழங்கினார்.

அத்துடன், போலியான ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்ட மதுபானப் போத்தல்களை மீட்பதற்கு மேற்கொள்ளப்படும் சுற்றிவளைப்புக்களின் விபரங்கள், கையகப்படுத்தப்பட்ட மதுபான உற்பத்தி மற்றும் விநியோகம் செய்த நபர்கள் தொடர்பில் 2023 செப்டெம்பர் 15ஆம் திகதிக்கு முன்னர் நடவடிக்கை எடுக்குமாறும் குழுவின் தலைவரினால் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.

அதேநேரம், பாதுகாப்பு ஸ்டிக்கர் தொடர்பில் காணப்படும் சட்ட ஒழுங்கு விதிகள் குறித்து கேள்வியெழுப்பிய குழு, ஒரு சிலநிறுவனங்கள் மாத்திரம் இந்த ஸ்டிக்கரைப் பயன்படுத்தாதிருப்பதற்கு சட்டத்தில் காணப்படும் ஏற்பாடுகளைத் திருத்தி சகல நிறுவனங்களாலும் உற்பத்தி செய்யப்படும் மதுபானப் போத்தல்களிலும் ஸ்டிக்கர்களை ஒட்டப்படுவது கட்டாயப்படுத்தப்பட வேண்டும் என்றும் தலைவர், திணைக்களத்தின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

அத்துடன், இலங்கை மதுவரித் திணைக்களத்தினால் இவ்வருடத்தில் மற்றும் கடந்த வருடங்களில் வசூலிக்கப்படவேண்டியுள்ள நிலுவைத் தொகையான 7 பில்லியன் ரூபாவை மீளப்பெறுவதற்கான திட்டத்தை எதிர்வரும் ஒக்டோபர் 30ஆம் திகதிக்கு முன்னர் குழுவிடம் சமர்ப்பிக்குமாறும் வழிவகைகள் பற்றிய குழுவின் தலைவர் அறிவித்தார். அதேநேரம், நுவரெலியா பிரதேசத்தில் மதுவரித் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகள் தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டது

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.