பாசுமதி அல்லாத பச்சரிசி ஏற்றுமதிக்கு, கடந்த மாதம் இந்தியா கட்டுப்பாடுகளை விதித்ததைத் தொடர்ந்து, உலகளவில் பச்சரிசியின் விலை உயர்ந்து வருவதால், பச்சரிசி உணவை விரும்பும் உலக மக்கள், புழுங்கல் அரிசிக்கு மாற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்தியாவின் உள்நாட்டு சந்தையில் அரிசி விலை உயர்வு காரணமாக, அரிசி ஏற்றுமதிக்கு, இந்தியா சமீபத்தில் கட்டுப்பாடுகளை விதித்தது.
இதன் காரணமாக, சர்வதேச அரிசி சந்தையில், டன் ஒன்றுக்கு 8,200 ரூபாய் வரை விலை உயர்ந்து, தற்போது 49,200 – 51,660 ரூபாயாக அதிகரித்துள்ளது.
அதேநேரம், இந்திய புழுங்கல் அரிசியின் விலை, ஜூலை 20ம் தேதிக்கு முன் 8,200 ரூபாய் வரை அதிகரித்து, 36,900 – 37,720 ரூபாயாக உயர்ந்துள்ளது. தாய்லாந்து அரிசி டன் ஒன்றுக்கு, கிட்டத்தட்ட 47,150 ரூபாயாக உள்ளது.
விலை மலிவு
மேற்கு ஆப்ரிக்க நாடுகள் மலிவு விலை அரிசியையே நாடுகின்றன. தாய்லாந்து, வியட்னாம், பாகிஸ்தான் வழங்கும் விலையை விட, இந்திய அரியின் விலை மலிவானது என்று ஏற்றுமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
உலக சந்தையில், இந்தியா குருணை அரிசி, பச்சரிசி மற்றும் புழுங்கல் அரிசிகளை மலிவான விலையில் வழங்குகிறது. ஆனால், தற்போது இந்தியாவின் தடையால், ஆப்ரிக்க நாடுகள் குருணை மற்றும் பச்சரியை இறக்குமதி செய்ய முடியாது.
இதனால் அவர்கள் புழுங்கல் அரிசியை மாற்றாக பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது. ஏற்றுமதிக்கான கொள்கையில் மாற்றம் வரும் வரை இந்நிலையே நீடிக்கும்.
உலக சந்தை
உலக அரிசி சந்தையில், புழுங்கல் அரிசி வினியோகத்தில் முக்கிய இடத்தில் இந்தியா உள்ளது. 70-80 லட்சம் டன் அரிசி பங்களிப்பை வழங்குகிறது. இந்தியாவிற்கு அடுத்து தாய்லாந்து, பத்து லட்சம் டன் வழங்குகிறது. உலக அரிசி சந்தையின் 20 சதவீத புழுங்கல் அரிசியில், 80 சதவீதத்தை இந்தியாவும்; 20 சதவீதத்தை தாய்லாந்தும் வழங்கி வருகின்றன.
தெற்கு ஆப்ரிக்க நாடுகளில் ஒரு சில நாடுகள் தாய்லாந்தின் புழுங்கல் அரிசியை வாங்கினாலும், மீதமுள்ள நாடுகள், இந்திய அரிசியையே வாங்கி வருகின்றன. மேலும், இந்தியா, மேற்கு ஆப்ரிக்காவைச் சேர்ந்த 10 நாடுகளுக்கு புழுங்கல் அரிசியை ஏற்றுமதி செய்து வருகிறது.
நடப்பு நிதியாண்டில் முதல் மூன்று மாதங்களில் 21 லட்சம் டன் புழுங்கல் அரிசியை ஏற்றுமதி செய்துள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் 17 லட்சம் டன்னாக இருந்தது. பாசுமதி அல்லாத பச்சரிசியின் ஏற்றுமதி, இதே காலகட்டத்தில் 58 சதவீதம் அதிகரித்து, 18 லட்சம் டன்னாக இருந்ததாக ஏற்றுமதிக்கான வர்த்தக அமைப்பின் தரவுகள் தெரிவிக்கின்றன.
நிலைமை தொடரும்
அதிக ஏற்றுமதிகள், நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையில் 7 சதவீத உயர்வு உள்ளிட்ட காரணங்களினால், ஜூன் மற்றும் ஜூலையில், இந்தியாவில் அரிசி விலை 11 சதவீதம் உயர்ந்தது. இதன் விளைவாக, பச்சரிசி ஏற்றுமதியை அரசு கட்டுப்படுத்தியது. இது பாசுமதி அல்லாத அரிசி ஏற்றுமதியில் 33 சதவீதம் ஆகும்.
குருணை அரிசி ஏற்றுமதி, ஏற்கனவே கடந்த செப்டம்பரில் தடை செய்யப்பட்டது. குருணை மற்றும் பச்சரிசி ஏற்றுமதியை தடை செய்வதன் வாயிலாக, உலக அரிசி சந்தையில் 1கோடி டன் அரிசி வரை குறைக்கப்பட்டதால் இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் இருந்து பச்சரிசி மற்றும் குருணை அரிசியை இறக்குமதி செய்யாதபோது, மக்கள் தாங்களாகவே புழுங்கல் அரிசிக்கு மாற வேண்டிய சூழல் ஏற்படும் என்று இந்திய அரிசி ஏற்றுமதி கூட்டமைப்பு தலைவர் கிருஷ்ணா ராவ் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், ஏற்றுமதிக்கு தடை விதித்து இரண்டு வாரங்களுக்கும் மேலாகி விட்டது. இந்தியாவின் அரிசி விலையில் ஸ்திரத்தன்மை வரும் வரை இந்த நிலை தொடரும் என தெரிவித்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்