புதுடில்லி:“டில்லி மாநகராட்சி சார்பில் நடத்தப்படும் ‘டில்லி இனி சுத்தமாக இருக்கும்’ என்ற தூய்மை இயக்கம் நிச்சயமாக வெற்றி பெறும்; தலைநகர் டில்லியை சுத்தமாக மாற்றும்,” என, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
டில்லி மாநகராட்சி ‘டில்லி இனி சுத்தமாக இருக்கும்’ என்ற தூய்மை இயக்கத்தை நேற்று துவக்கப்பட்டது.
இதுகுறித்து, ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,வும், டில்லி மாநகராட்சி பொறுப்பாளருமான துர்கேஷ் பதக், சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவு:
டில்லி மாநகராட்சியை ஆம் ஆத்மி கட்சி நிர்வகித்து வருகிறது. கடந்த 15 ஆண்டுகளாக, நிர்வாகம் செய்த பா.ஜ., டில்லியை குப்பைக் கிடங்காக மாற்றி விட்டது. முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் அறிவுறுத்தல்படி, கவுன்சிலர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மற்றும் மாநகராட்சி ஆகியோர் இணைந்து, டில்லி மாநகரை சுத்தம் செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
அதே பதிவில் பதில் அளித்துள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், “பிரம்மாண்ட தூய்மை இயக்கத்தை துவக்கியுள்ள டில்லி மாநகராட்சிக்கு வாழ்த்துகள். இந்த இயக்கம் நிச்சயமாக வெற்றி பெறும். நமது டில்லி மாநகரம் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் மாறும் என்பதில் முழு நம்பிக்கை வைத்துள்ளேன்,”என, கூறியுள்ளார்.
ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த நந்த் நாக்ரி கவுன்சிலர் ரமேஷ் குமார், “போர்க்கால அடிப்படையில் எனது வார்டில் தூய்மைப் பணியை செய்து வருகிறேன். விரைவில் நாங்கள் மாநகரின் ஒவ்வொரு மூலையையும் சுத்தமாக்குவோம்,”என, கூறியுள்ளார்.
365 நாட்களும்…
ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ.,வும், டில்லி மாநகராட்சி பொறுப்பாளருமான துர்கேஷ் பதக் நேற்று கூறியதாவது:டில்லி மாநகராட்சி நேற்று துவக்கப்பட்டுள்ள துாய்மை இயக்கம் 365 நாட்களும் நடக்கும். கவுன்சிலர்கள் தினமும் தங்களது வார்டுகளில் துாய்மைப் பணியை ஆய்வு செய்வர். மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் துாய்மைப் பணியை கண்காணிப்பர்.மாநகர் முழுதும் துாய்மைப் பணிக்கு 3,000 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது. அதேபோல மேயர் மற்றும் துணை மேயர் ஆகியோருடன் நானும் தினமும் இரண்டு வார்டுகளை ஆய்வு செய்வேன்.இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement