முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். மோடி பெயர் குறித்த அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றம் அண்மையில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்ததை அடுத்து அவர் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
சூரத் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை வழங்கியதால் மீண்டும் எம்.பி பதவியை பெற்றார். அதன்பிறகு நாடாளுமன்றம் சென்று நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது உரையாற்றிய ராகுல், பிரதமர் மோடி மீதும் மத்திய அரசின் மீதும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
இந்த நிலையில்மீண்டும் எம்.பி பதவியை பெற்ற பிறகு முதல்முறையாக தனது சொந்த தொகுதியான வயநாட்டிற்கு ராகுல் காந்தி சென்றார். இதற்காக இன்று காலை டெல்லியில் இருந்து இன்டிகோ விமானம் மூலம் கோவை வந்தடைந்த ராகுலுக்கு, தமிழ்நாடு மற்றும் கேரள காங்கிரஸ் நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பாரம்பரிய நடனமாடிய ராகுல்
ராகுல் பயணத்தின் ஒரு பகுதியாக உதகமண்டலம் அருகேயுள்ள முத்தநாடு கிராமத்தில் தோடர் பழங்குடியின மக்களை சந்தித்துப் பேசினார். ராகுலுக்கு அவர்கள் சிறப்பான வரவேற்பை வழங்கினர். தோடர் இன மக்களின் பாரம்பரிய உடையை விரும்பி அணிந்துகொண்ட ராகுல் காந்தி, அவர்களுடன் இணைந்து நடனமாடினார்.
இளைஞர்கள் இளவட்டக்கல் தூக்குவதை ரசித்துப் பார்த்ததோடு கைதட்டி உற்சாகப்படுத்தினார். அங்கிருந்த குழந்தையையும் தூக்கி முத்தமிட்டு கொஞ்சி மகிழ்ந்தார். பின்னர் அவர்களிடம் இருந்து விடைபெற்று சென்றார். இதுதொடர்பாக வீடியோக்கள், புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளன.
கோவை வந்த ராகுல் காந்தியின் ரவுண்ட்ஸ் ஸ்டார்ட்.!
வயநாட்டில் மக்கள் சந்திப்பு
உதகையில் இருந்து சாலை மார்கமாக கார் மூலம் கிளம்பிய ராகுல் கூடலூர் வழியாக வயநாடு சென்றார். கல்பேட்டாவில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு நடைபெறும் பொதுக் கூட்டத்தில் ராகுல் காந்தி கலந்துகொண்டுள்ளார்.
இரண்டு நாள் சுற்றுப் பயணத்தில் ராகுல் காங்கிரஸ் கட்சியினரையும், மக்களை சந்திக்கிறார். இதுதொடர்பாக கேரள காங்கிரஸ் செயல் தலைவர் சித்திக் கூறுகையில், “ராகுல் காந்தியை வரவேற்க பிரமாண்ட ஏற்பாடுகளை செய்துள்ளோம்.
வயநாடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி கூட்டம் நடைபெறுகிறது. ராகுல்காந்தி இன்றும், நாளையும் கூட்டத்தில் கலந்துகொள்கிறார். வயநாட்டில் ராகுல்காந்திக்கு வயநாடு வரலாற்றில் எப்போதும் இல்லாத அளவுக்கு சிறப்பான வரவேற்பு இருக்கும்” என்று தெரிவித்தார்.