தமிழகத்தை மீண்டும் உலுக்கிய நீட் தற்கொலை.. சென்னை மாணவர் எடுத்த சோக முடிவு.. அதுவும் அடுத்த நாளே!

சென்னை:
நீட் தேர்வில் இரண்டு முறை தோல்வி அடைந்ததால் சென்னையை சேர்ந்த மாணவர் தற்கொலை செய்து கொண்டிருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீட் விலக்கு மசோதாவில் ஒருபோதும் கையெழுத்திட மாட்டேன் என ஆளுநர் ஆர்.என். ரவி கூறிய அடுத்த நாளே இப்படியொரு சம்பவம் நடந்திருப்பது விதியா அல்லது தற்செயல் நிகழ்வா என சொல்ல தெரியவில்லை.

மருத்துவம், பல் மருத்துவம் ஆகிய படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டு விட்டது. முதலில் ப்ளஸ் 2 தேர்வு கட் ஆப் மதிப்பெண் அடிப்படையில் கிடைத்து வந்த மருத்துவக் கல்லூரி இடங்கள், தற்போது நீட் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற்றால் மட்டுமே கிடைக்கும் என மாறிவிட்டது. இந்த நீட் தேர்வால் கிராமப்புற மற்றும் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் மருத்துவக் கனவு தகர்ந்து போவதாக திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றன. மேலும், தமிழக அரசு சார்பில் நீட் விலக்கு மசோதாவும் இயற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

ஏனெனில் கோச்சிங் சென்டர்களில் சென்று படித்தால் மட்டுமே நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடியும் என்ற சூழல் நிலவுவதாக கூறப்படுகிறது. அதனால் வசதி இல்லாத மாணவர்களால் கோச்சிங் சென்டர்களுக்கு செல்ல முடியாததால் அவர்களுக்கு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைப்பதில்லை என பரவலாக குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது.

இந்த சூழலில்தான், கோச்சிங் சென்டருக்கு சென்று பயின்றும் நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் விரக்தியடைந்து சென்னையை சேர்ந்த மாணவர் தற்கொலை செய்து கொண்ட சோக சம்பவம் அரங்கேறியுள்ளது. குரோம்பேட்டையை சேர்ந்த ஜெகதீஸ்வரன் (19) என்ற மாணவர், நீட் தேர்வுக்கு தயாராகி வந்தார். இதற்காக தனியார் நீட் கோச்சிங் சென்டருக்கும் அவர் சென்று படித்துள்ளார். ஆனால், சமீபத்தில் நடந்த நீட் தேர்வில் அவர் தோல்வி அடைந்தார்.

இதற்கு முன்பும் நீட் தேர்வில் அவர் தோல்வி அடைந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து இரண்டு முறை நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் தன்னால் இனி மருத்துவரே ஆக முடியாது என்ற எண்ணம் அவருக்கு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் விரக்தியில் இருந்த மாணவன் ஜெகதீஸ்வரன், நேற்று தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது குரோம்பேட்டை போலீஸார் பிரேதப்பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

முன்னதாக, நேற்று சென்னை ஆளுநர் மாளிகையில் நீட் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது சேலத்தைச் சேர்ந்த ஒரு மாணவனின் பெற்றோர், “நீட் தேர்வுக்கு எப்போது தடை வரும்” என கேட்டனர். இதனால் அதிருப்தி அடைந்த ஆளுநர், “நீட் விலக்கு மசோதாவில் நான் கையெழுத்து போடவே மாட்டேன்” என பதிலளித்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.