நாங்குநேரியில் வெட்டுப்பட்ட சிறுவனுக்கு சுகாதாரத்துறையில் பணி.. சட்டென கூறிய மா. சுப்பிரமணியன்

நெல்லை:
“நாங்குநேரியில் சாதிய வன்மத்தால் கொலைவெறி தாக்குதலுக்கு உள்ளான சிறுவனுக்கு விரைவில் சுகாதாரத்துறையிலேயே வேலைக்கு அமர்த்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அதிரடியாக அறிவித்துள்ளார்.

நாங்குநேரியில் பட்டியலின வகுப்பைச் சேர்ந்த சின்னதுரை என்ற பள்ளி மாணவனும், அவனது தங்கையும் சக மாணவர்களால் வெட்டப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக 6 பேர் இதுவரை கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். தாக்குதலுக்கான இருவரும் தற்போது நெல்லையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்து நிவாரண உதவி வழங்க உத்தரவிட்டிருக்கிறார்.

அதேபோல, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், மாணவன் சின்னதுரையின் பள்ளி -கல்லூரி படிப்பு செலவுகளை தானே ஏற்றுக்கொள்வதாக அறிவித்திருந்தார். இந்த சூழலில், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், சிகிச்சை பெற்று வரும் மாணவன் சின்னதுரையையும், அவனது தங்கையையும் இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

மாணவன் சின்னதுரைக்கு தேவையான அனைத்து சிகிச்சைகளும் இங்கு நல்ல முறையில் அளிக்கப்பட்டு வருகின்றன. இருந்தபோதிலும், மாணவனுக்கு கை அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் கூறுகிறார்கள். மேலும், சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அதை செய்தால் சிறப்பாக இருக்கும் என மருத்துவர்களே பரிந்துரைக்கிறார்கள். இதனால் ஸ்டான்லி மருத்துவமனைக்கு மாணவனை கொண்டு செல்வது என முதலில் நினைத்தோம். பின்னர், மாணவனை அலைக்கழிக்க வேண்டாம் என்பதால் ஸ்டான்லி மருத்துவமனையில் உள்ள சிறப்பு மருத்துவர்களையே இங்கு வரவழைக்க முடிவு செய்திருக்கிறோம்.

மாணவனின் தாயார் எங்களிடம் ஒரு மனுவை தந்திருக்கிறார். அதாவது, சிகிச்சை முடிந்து வீடு திரும்பும் போது மாணவனுக்கும், தங்கைக்கும் ஏதாவது வேலைவாய்ப்பை அரசு சார்பில் ஏற்படுத்தி தர வேண்டும் என அவர் கோரிக்கை வைத்திருக்கிறார். இப்போது இருவருக்குமே 18 வயது பூர்த்தி ஆகவில்லை. எனவே 18 வயது ஆனதும் மாணவன் சின்னதுரைக்கு தமிழக சுகாதாரத்துறையிலேயே ஒரு நல்ல வேலையில் அமர்த்த முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இவ்வாறு மா. சுப்பிரமணியன் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.