மாணவியின் தண்ணீர் பாட்டிலில் சிறுநீர் கலப்பு; சிறுவர்கள் கொடுத்த அதிர்ச்சி – கல்வித்துறை சொல்வதென்ன?

புதுக்கோட்டை மாவட்டம், கீழையூரில் அரசு உயர் நிலைப்பள்ளி உள்ளது. இங்குள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுவர்கள் இருவர், அதே பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவியின் தண்ணீர் பாட்டிலில், தண்ணீருடன், சிறுநீரினை கலந்திருக்கின்றனர். இதனையறியாத மாணவி அந்த தண்ணீர் பாட்டிலைத் திறந்து தண்ணீர் குடித்திருக்கிறார். அப்போது, அந்த மாணவிக்கு வாந்தி ஏற்பட்டிருக்கிறது. இதற்கிடையே, சம்பந்தப்பட்ட அந்த மாணவர்கள், மாணவியிடம், “சிறுநீர் கலந்த குடிநீரை குடித்துவிட்டாயே” என்று கிண்டல் செய்ததாகக் கூறப்படுகிறது. உடனே இது குறித்து, அந்த மாணவி பள்ளி தலைமையாசிரியர் மற்றும் தனது பெற்றோரிடம் தகவல் தெரிவித்திருக்கிறார். இது குறித்து கேட்டு அதிர்ச்சியடைந்த தலைமையாசிரியர், உயர் அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்தார். இதைத் தொடர்ந்து, மாவட்ட கல்வி அதிகாரிகள் பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

பள்ளிக் குழந்தைகள்

அப்போது, மாணவியின் குடிநீரில், மாணவர்கள் சிறுநீரை கலந்தது கண்டறியப்பட்டது. உடனே, சம்பந்தப்பட்ட மாணவர்களையும், அவர்களது பெற்றோர்களையும் பள்ளிக்கு வரவழைத்து விசாரணை நடத்தினர். அப்போது, மாணவர்கள் இருவரும் விளையாட்டாக மாணவியின் குடிநீர்ப் பாட்டிலில் சிறுநீரைக் கலந்ததாக வாக்குமூலம் கொடுத்துள்ளனர். உடனடியாக, இரண்டு மாணவர்களுக்கும் டி.சி கொடுக்கப்பட்டது. மேலும், இருவரையும் அருகே இருக்கும் வெவ்வேறு பள்ளிகளில் சேர்க்க மாவட்டக் கல்வித்துறை சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

இது குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி மஞ்சுளாவிடம் விளக்கம் கேட்டோம், “இந்த விவகாரம் தொடர்பாக, தலைமையாசிரியரிடமிருந்து புகார் கிடைத்த உடனே விசாரணை மேற்கொண்டோம். அப்போது, சிறுவர்கள் விளையாட்டாக, குடிநீரில் சிறுநீரைக் கலந்தது தெரியவந்தது. ஒரு மாணவரின் தாய் சற்றே மனநலம் பாதிக்கப்பட்டிருந்ததது தெரியவந்தது. அனைவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள். சிறுவர்கள் இதனை விளையாட்டாக செய்ததாகக் கூறுவது அதிர்ச்சியளிக்கிறது. இது தவறானது. அதனால், உடனடியாக சம்பந்தப்பட்ட பள்ளியில் இருவருக்கும் டி.சி கொடுக்கப்பட்டு, இருவரையும் வெவ்வேறு பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.

மருத்துவ கவுன்சிலிங்

மேலும், மாணவர்களின் எதிர்கால படிப்பு பாதிக்கக் கூடாது என்பதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. சம்பந்தப்பட்ட மாணவர்கர்கள்மீது கூடுதல் கவனம் வைக்கவும் சம்பந்தப்பட்ட தலைமையாசிரியர்களிடம் வலியுறுத்தியிருக்கிறேன். மாணவர்களுக்கும், சம்பந்தப்பட்ட மாணவிக்கும் மனநல மருத்துவரை வரவழைத்து கவுன்சிலிங் கொடுத்திருக்கிறோம். விசாரித்த வரை, சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு பெற்றோர்களின் சரியான வழிகாட்டுதல்கள் இல்லாததால், இதுபோன்ற சம்பவம் நடந்திருக்கிறது. இது போன்ற சம்பவங்கள் இனி நடக்காத வகையில், ஒவ்வொரு பள்ளியிலும், தலைமையாசிரியர் மூலம் கவுன்சிலிங்கை தீவிரப்படுத்த கூறியிருக்கிறோம்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.