ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில் இரண்டு ரயில்களைக் குறிவைத்து, பல பயணிகளிடம் பணம் மற்றும் நகைகளைக் கொள்ளையடித்த ஆயுதம் ஏந்திய கொள்ளையர்கள், குற்றத்தைச் செய்துவிட்டு, ரயிலின் சங்கிலியை இழுத்து நிறுத்திவிட்டு காட்டுக்குள் சென்று தலைமறைவானதாக ரயில்வே போலீஸார் தெரிவித்தனர். இது குறித்து ஊடகங்களிடம் பேசிய ரயில்வே போலீஸார், “கொள்ளையர்கள் ரயிலின் சிக்னலை சேதப்படுத்தி ரயிலை நிறுத்தியிருக்கின்றனர். S2, S4, S5, S6, S7, S8 ஆகிய பெட்டிகளைக் குறிவைத்து கொள்ளையர்கள் பயணிகளின் தங்க நகைகள் உட்பட விலைமதிப்புமிக்க பொருள்களைக் கொள்ளையடித்துச் சென்றிருக்கின்றனர். பின்னர் செகந்திராபாத்-தாம்பரம் சார்மினார் ரயிலைக் குறிவைத்த கும்பல், அதில் S1, S2 பெட்டிகளிலிருந்த பயணிகளிடம் கொள்ளையடிக்க முயன்றிருக்கிறது. ஆனால், அது தோல்வியில் முடிந்தது” என்றார்.
இது குறித்து ஓங்கோல் ரயில்வே காவல் துணைக் கண்காணிப்பாளர் வெங்கடேஷ்வரலு பேசுகையில், “பயணிகள் அளித்த புகாரின்படி சுமார் நான்கைந்து கொள்ளையர்கள் நுழைந்து பயணிகளை எழுப்பி அவர்களிடம் ஆயுதங்களைக் காட்டி மிரட்டி, கொள்ளையடித்திருக்கின்றனர். அவர்கள் முன்னதாக கொள்ளையடிப்பதற்கு ஏதுவாக உளவு பார்த்திருக்கின்றனர். சரியாக, காடு போன்ற பகுதி வழியாக ரயில் சென்றுகொண்டிருந்தபோது, ரயில் பெட்டிகளிலிருந்த பயணிகளிடம் கத்திமுனையில் கொள்ளையடித்திருக்கின்றனர்.

பின்னர், சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தியிருக்கின்றனர். ரயில் நின்றதும், அதிலிருந்து இறங்கி இருளில் மறைந்துவிட்டனர். அதைத் தொடர்ந்து, காவாலி ரயில் நிலையம் வந்தவுடன், பயணிகள் ரயில்வே போலீஸில் புகாரளித்தனர். அவர்கள் அளித்த புகாரின்படி, கொள்ளையர்கள் கணிசமான அளவு பணத்தைத் தவிர, சுமார் 300 கிராம் எடையுள்ள தங்க ஆபரணங்களைக் கொள்ளையடித்திருக்கின்றனர்.
மற்றொரு ரயிலில் முறியடிக்கப்பட்ட கொள்ளை முயற்சி!
இந்த நிலையில் திங்கள்கிழமை அதிகாலை அதே நேரத்தில் செகந்திராபாத்-தாம்பரம் சார்மினார் விரைவு ரயிலில் கொள்ளை முயற்சி நடந்திருக்கிறது. அதை ரயில்வே போலீஸார் முறியடித்திருக்கின்றனர். செகந்திராபாத்-தாம்பரம் சார்மினார் விரைவு ரயிலில் பயணித்த ரயில் பயணிகளிடம் இதே போன்று ஆயுதம் ஏந்திய கொள்ளைக் கும்பல் ஒன்று, தெட்டு கிராமம் அருகே கொள்ளையடிக்க முயன்றது. S1, S2 பெட்டிகளுக்குள் புகுந்த கொள்ளையர்கள், பயணிகளிடம் கொள்ளையடிக்க முயன்றனர்.

இந்தப் பெட்டிகளில் ரயில்வே பாதுகாப்புப் படை வீரர்கள் இருப்பதைக் கவனித்த கும்பல், அவர்களின் முயற்சியைக் கைவிட்டுத் தப்பிச் செல்ல முயன்றது. அவர்களை போலீஸார் கண்டு விரட்டியதும், கொள்ளையர்கள் சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்திவிட்டு, தப்ப முயன்றிருக்கின்றனர். போலீஸார் விரட்டவே, அவர்கள்மீது கற்களை வீசிவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். இத்தகைய குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டவர்களைத் தீவிரமாகத் தேடிவருகிறோம்” என்றார்.