"குழந்தைகளை பார்த்துக் கொள்ளும் கடமை பெற்றோர் உடையது".. நீட் தற்கொலை குறித்து அண்ணாமலை கருத்து

சென்னை:
நீட் தேர்வு தோல்வியால் மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ள கருத்துக்கு சமூக வலைதளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

நீட் தேர்வில் இரண்டு முறை தோல்வி அடைந்ததால் சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த ஜெகதீஸ்வரன் (19) என்ற மாணவர் நேற்று முன்தினம் தற்கொலை செய்து கொண்டார். மகன் இறந்த துக்கம் தாங்க முடியாமல் அவரது தந்தை நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழகத்தில் தொடர்ந்து நீட் தற்கொலைகள் நிகழ்ந்து வருவதற்கு மத்திய அரசே காரணம் என பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில், மாணவர் ஜெகதீஸ்வரன் இறப்புக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நீட் தேர்வு தோல்வியால் மாணவர் ஜெகதீஸ்வரன், அவரது தந்தை தற்கொலை செய்து கொண்ட செய்தியை அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். குழந்தைகள் சமூக அழுத்தங்களுக்கு பலியாகி விடாமல் பார்த்துக் கொள்ளும் கடமை பெற்றோருக்குரியது. குழந்தைகளை கல்வி, மதிப்பெண்களை வைத்து ஒருவரோடு ஒருவர் ஒப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும்” என அண்ணாமலை கூறியுள்ளார்.

இதனிடையே, அண்ணாமலையின் இந்த கருத்துக்கு சமூக வலைதளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்து வருவதை பார்க்க முடிகிறது. நீட் தேர்வை கொண்டு வந்து மாணவர்களை மன அழுத்தத்துக்கு உள்ளாக்கிவிட்டு, தற்போது அவர்களின் பெற்றோர் மீது பழிபோட்டு பாஜக தப்பிக்க பார்ப்பதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.