தமிழர்கள் தமிழுடன் இந்தியையும் கற்க வேண்டும்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வலியுறுத்தல்

புதுடெல்லி: தமிழர்கள் தம் தாய்மொழியான தமிழுடன் சேர்த்து இந்தியையும் கற்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வலியுறுத்தி உள்ளார். குஜராத்தின் அகமதாபாத்திலுள்ள இந்திய ஆசிரியர்கள் கல்வி நிறுவனத்தின் (ஐஐடிஇ) பட்டமளிப்பு விழாவில் பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

கடந்த 2010-ல் குஜராத்தின் முதல்வராக இருந்த நரேந்திரமோடி, காந்திநகரில் சிறப்பு பல்கலைகழகமாக ஐஐடிஇயை நிறுவினார். இதன் பட்டமளிப்பு விழாவில் மத்திய உள்துறை அமைச்சரான அமித்ஷா கலந்து கொண்டார்.மொத்தம் 2,927 மாணவர்கள் இந்த விழாவில் பட்டம் பெற்றனர். இந்த விழாவில் உள்துறை அமைச்சர் பேசியது: நான் ஆங்கிலத்துக்கு எதிரானவன் அல்ல. ஏனெனில், எந்தவகையிலான அறிவையும் புறக்கணிக்காத நாடாக இந்தியா உள்ளது.

நம் வரலாறு, இலக்கணம், இலக்கியங்கள் தாங்கியுள்ள தாய்மொழியை பாதுகாப்பது மாணவர்களாகிய உங்களின் கடமை. இதனால், புதிய கல்விக் கொள்கை 2020-ல் தாய்மொழியை குழந்தைகளுக்கு புகட்ட முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.ஆங்கிலத்துடன் சேர்த்து ஜெர்மன், பிரெஞ்ச் போன்ற மொழிகளை குழந்தைகள் கற்றுக் கொள்ள வேண்டும். ஆனால், குஜராத்தின் குழந்தைகள் குஜராத்தியுடன் இந்தியையும் கற்க வேண்டும்.

அசாமியர்கள் அசாம் மொழியுடன் இந்தியை கற்க வேண்டும். தமிழர்கள் தமிழுடன் சேர்த்து இந்தியையும் கற்பது அவசியம். இது நடந்தால் நம் நாடு முன்னேறுவதை எவராலும் தடுக்க முடியாது.இங்கு நான்கு பாடங்களில் ஒன்றாக சம்ஸ்கிருத மொழியும் கற்றுத்தரப்படுகிறது. இங்கு கிடைக்கும் அடிப்படை சம்ஸ்கிருதக் கல்வியை கூடுதலாகக் கற்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.இந்த உலகம் முழுவதிலுமாக ஒரு அறிவுக்களஞ்சியம் உள்ளதென்றால் அது, நம் உபநிடதங்களும், வேதங்கள் மற்றும் சம்ஸ்கிருதம் மட்டுமே. இதை கற்பவர்கள் வாழ்க்கையில் எந்த பிரச்சினைகளும் ஒரு பிரச்சினையாகவே இருக்காது.

அறிவு எங்கிருந்து வந்தது என்பதைப் பற்றி சிந்திக்காமல் நல்ல எண்ணங்களை உள்வாங்க வேண்டும் என வேதங்கள் போதிக்கின்றன. அறிவு எங்கிருந்து வந்தாலும் அது நம் சமூதாயம், மக்கள், உலகம் மற்றும் பிரபஞ்சத்தின் நலனுக்கானதா எனப் பார்க்க வேண்டும்.அதில் நவீன பரிமாணத்தையும் சேர்க்க வேண்டும். அறிவு மற்றும் அறிவியல் துறையில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த மாற்றங்களைப் புரிந்துகொண்டு இரண்டையும் ஒருங்கிணைத்து முழுமையானக் கல்வி முறையை உருவாக்க வேண்டும்.கல்வியின் பொருள் என்பது குழந்தைக்கு சரியான பாதையை காட்டி, வழிகாட்டியாக மாறுவது ஆகும், என்று அவர் பேசினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.