அகில இலங்கை திடீர் மரண விசாரணை அதிகாரிகளின் மாநாடு (12) அலரி மாளிகையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டார்.
இருபத்தைந்து வருடங்களுக்கும் மேலாக சேவையில் உள்ள திடீர் மரண விசாரணை அதிகாரிகள் மற்றும் ஏனைய மரண விசாரணை அதிகாரிகள் இதன்போது கௌரவிக்கப்பட்டனர்.
இங்கு மேலும் உரையாற்றிய பிரதமர்-
திடீர் மரண விசாரணை அதிகாரி சேவைக்கு இணையாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சுடன் தொடர்புபட்ட பிறப்பு மற்றும் இறப்பு பதிவு செய்யும் துறைகளும் மிகுந்த பரஸ்பர புரிந்துணர்வுடன் நாட்டு மக்களுக்கு சேவையாற்றுவதற்கு தேவையான வசதிகளை அதிகரிக்க வேண்டும்.
பணம் இல்லாத ஒரு காலத்தில் ஒதுக்கீடுகளை அதிகரிக்க முடியாது என்பதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள். ஆனால் கொள்கை ரீதியில், திடீர் மரண விசாரணையாளர் சேவைக்கு மேலும் அங்கீகாரத்தை வழங்கும் நடவடிக்கைக்கும், கடந்த காலத்தில் தீர்மானிக்கப்பட்ட கொடுப்பனவுகளுக்கு மேலதிகமாக சில கொடுப்பனவுகளை அதிகரிப்பதற்கும் எனது ஆதரவு தொடர்ந்து கிடைக்கும்.
இது தொடர்பில் நீதியமைச்சரும் நானும் பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சும் கலந்துரையாடி வருகின்றோம். நீங்கள் மேற்கொண்டுவரும் சேவைக்கு பாராட்டு மட்டுமன்றி, சேவையில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்த எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
உலகில் ஒரு உயிர் பிறக்கும் தருணம் அனைவரும் மகிழ்ச்சியடையும் சந்தர்ப்பம். குடும்பத்தினர் மட்டுமின்றி, நண்பர்கள், உறவினர்கள் என அனைவரும் மகிழ்ச்சியடைவதைப் போன்று நாடும் மகிழ்ச்சியடைகிறது. எதிர்காலத்தில் பெரிய பொறுப்புகளை ஏற்கக்கூடிய குழந்தைகள் பிறப்பதால் தான் அந்த மகிழ்ச்சி. மகிழ்ச்சியைப் போன்றே சோகமும் வாழ்க்கையில் இருப்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
சோகத்தின் போதும், சோகத்தின் பின்னரான காலத்திலும் திடீர் மரண விசாரணையாளர்கள் செய்யும் சேவை தனித்துவமானது. ஒரு நாடு அந்த மனிதாபிமான சேவையைப் புரிந்துகொண்டு மரியாதை செய்வது மட்டுமல்லாமல், அதற்கு உரிய அங்கீகாரத்தையும் வழங்க வேண்டும்.
இந்த மாநாட்டில் கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ரவீந்திர பெர்னாண்டோ விசேட உரையாற்றியதுடன், நீதியமைச்சின் மேலதிக செயலாளர் கிருஷாந்தி மீகஹபொல, சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் லக்ஷ்மி சோமதுங்க, அகில இலங்கை மரண விசாரணை நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் அனுர ஹேரத், செயலாளர் மொஹமட் ஹர்ஷான் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.