திருப்பதி முதல் திருச்செந்தூர் வரை – இந்த வாரம் பக்தர்கள் அறிந்துகொள்ள வேண்டிய பயனுள்ள அப்டேட்ஸ்!

திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பல முக்கியமான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. பக்தர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த நடந்து மலையேறிச் செல்பவர்களுக்கான திவ்ய தரிசன டோக்கன்கள் மீண்டும் வழங்கப்படுகின்றன. சாதாரண நாள்களில் இந்த டோக்கன்கள் மூலம் மூன்று அல்லது நான்கு மணி நேரத்துக்குள் சுவாமி தரிசனம் செய்யலாம்.

சமீபகாலமாக மலைப்பாதையில் சிறுத்தையின் நடமாட்டம் பக்தர்களுக்குக் கவலையை ஏற்படுத்தி வந்தது. மூன்று தினங்களுக்கு முன் 6 வயது பெண் குழந்தையை சிறுத்தை ஒன்று வனத்துக்குள் தூக்கிச் சென்றது. தேடுதலுக்குப் பின் குழந்தை சடலமாக மீட்கப்பட்டது.

திருமலை திருப்பதி

எனவே பாதுகாப்புக் காரணங்களுக்காக பக்தர்கள் அலிபிரி மெட்டு, ஶ்ரீவாரி மெட்டு ஆகிய வழிகளில் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளை அழைத்துச் செல்லத் தடை விதிக்கப்பட்டது. மேலும் பக்தர்கள் கூட்டமாகவே செல்லவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது குழந்தைகளைக் காலை 5.30 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை அழைத்துச் செல்லலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் செல்லும்போது கூட்டமாகச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் திருப்பதி மலைக்கு இரண்டு சக்கர வாகனங்கள் மூலம் செல்பவர்கள் காலை 6 மணி முதல் மாலை ஆறுமணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். இந்நிலையில் பக்தர்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை கூண்டுவைத்துப் பிடிக்கப்பட்டது என்னும் செய்தி மகிழ்ச்சி அளித்துள்ளது.

திருப்பதி பெருமாளை கருட சேவையில் தரிசனம் செய்ய பக்தர்கள் விரும்புவார்கள். இந்த மாதம் மூன்று கருட சேவைகள் நிகழ்வது குறிப்பிடத்தக்கது. ஆகஸ்ட் 21 -ம் தேதி திங்கட் கிழமை கருடபஞ்சமி விழா திருமலையில் கொண்டாடப்பட இருக்கிறது. இதை ஒட்டி பெருமாள் கருடசேவையில் எழுந்தருல்வார் என்பது குறிப்பிடத்தக்கது.

டோக்கன் இல்லாத சர்வ தரிசனம் செய்ய தற்போது 25 முதல் 30 மணி நேரம் வரை தேவைப்படுகிறது. குறிப்பாக வார இறுதி நாள்களில் கூட்டம் அலைமோதுகிறது. எனவே டிக்கெட்களை உறுதி செய்துகொண்டு திருமலைக்குச் செல்வது நல்லது.

மேல் மலையனூர்

ஆகஸ்ட் 16- ம் தேதி ஆடி அமாவாசை. இதையொட்டி மேல்மலையனூரில் ஏராளமான பக்தர்கள் திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல்நாள் சுதந்திர தினம் என்பதால் பக்தர்கள் வருகை அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காகப் பல்வேறு ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது. சிறப்புப் பேருந்துகள், கண்காணிப்புக் கேமராக்கள், தீயணைப்பு வாகனங்கள் ஆகியன தயார் நிலையில் உள்ளன. அமாவாசை தினத்தில் நடைபெறும் ஊஞ்சல் உற்சவம் காண திரளான பக்தர்கள் மேல் மலையனூருக்கு வருவார்கள் என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

ராமேஸ்வரம்

ஆடி அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் கோயில் நடை அதிகாலை 4 மணிக்குத் திறக்கப்பட்டு, ஸ்படிகலிங்க பூஜை நடைபெறும். வழக்கம்போல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். கூட்டத்தைப் பொறுத்து வரும் பக்தர்கள் அனைவரும் சாமி தரிசனம் செய்ய ஏதுவாக மதியம் நடை சாத்தப்படும் நேரம் குறைக்கப்படும் என கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராமேஸ்வரம் கோயில்

அதேபோல் ஆடி அமாவாசை முதல் நாள் இரவு வரை மட்டுமே ராமேஸ்வரம் நகருக்குள் வெளியூர் வாகனங்கள் அனுமதிக்கப்படும் எனவும், 16-ம் தேதி அமாவாசை அன்று வெளியூர் வாகனங்கள் அனைத்தும் ராமேஸ்வரம் பேருந்து நிலையத்துடன் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து நகரப் பேருந்துகள் மூலமாகவோ அல்லது உள்ளூர் கட்டண வாகனங்கள் மூலமாக கோயில் வாசலுக்கு வந்துசேரலாம்.

மேலும் திருச்சி, மதுரை, கும்பகோணம் அரசு போக்குவரத்து பணிமனைகளில் இருந்து ராமேஸ்வரத்திற்குச் சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ராமநாதபுரத்தில் இருந்து சேதுக்கரை, தேவிப்பட்டினம் கடற்கரைக்கு தர்ப்பணம் கொடுக்கச் செல்பவர்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

சதுரகிரி

சதுரகிரி சுந்தர மகாலிங்கம் சாமி கோயில் ஆடி அமாவாசையை முன்னிட்டு கடந்த 12-ம் தேதி முதல் பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டுள்ளனர். 17 -ம் தேதிவரை பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆடி அமாவாசை நாளில் மகாலிங்க சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

திருச்செந்தூர்

திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்:

15.8.23 அன்று திருக்கோயிலில் தேசியக்கொடி ஏற்றி இனிப்பு வழங்குதல் மற்றும் மதியம் அன்னதானம் நடைபெறும்.

16.8.23 தேதி ஆடி அமாவாசையன்று காலையில் தீர்த்தவாரி நடைபெறும். கடற்கரை ஓரத் தலம் என்பதால் கடற்கரையில் பக்தர்கள் புனிதநீராடி முன்னோர்களுக்குத் தர்ப்பணம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறும்.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில்

மதுரை

மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயிலின் மிக முக்கியமான உற்சவமான ஆவணி மூலத் திருவிழா கடந்த 12-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 18-ம் தேதி வரை சுவாமி சந்திரசேகர் 2-ம் பிராகாரப் புறப்பாடு நடைபெறும். 19-ம் தேதி அன்று கருக்குருவிக்கு உபதேசம் செய்த திருவிளையாடலும் 20 ம் தேதி நாரைக்கு மோட்சம் அருளிய திருவிளையாடலும் நடைபெறும்.

– இல. சைலபதி, இ.கார்த்திகேயன், விவேக்ராஜ், அ. கண்ணதாசன், பாலசுப்பிரமணியன், என்.ஜி.மணிகண்டன்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.