புதுடில்லி : ‘தேடுதல் குழுவால் பரிந்துரைக்கப்படாத நபர்களின் பெயர்களையும், தேர்தல் ஆணையர் பதவிக்கு பரிசீலிக்கும் அதிகாரம், பிரதமர் தலைமையிலான தேர்வுக்குழுவுக்கு உள்ளது’ என, தேர்தல் ஆணையர் நியமனம் தொடர்பான மசோதாவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ராஜ்யசபாவில் கடந்த வாரம் மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், தலைமை தேர்தல் ஆணையர், தேர்தல் ஆணையர் நியமனம் தொடர்பான புதிய மசோதாவை தாக்கல் செய்தார். அதில், ‘தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களை, பிரதமர், லோக்சபா எதிர்க்கட்சி தலைவர், கேபினெட் அந்தஸ்துள்ள மத்திய அமைச்சர் ஆகியோர் அடங்கிய குழுவே தேர்வு செய்யும்’ என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இந்த குழுவில் இருந்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு பதிலாக, மத்திய அமைச்சர் இடம் பெறுவார் என்றும் இந்த மசோதாவில் கூறப்பட்டிருந்தது. இதற்கு எதிர்ப்பு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இந்நிலையில், இந்த மசோதாவில் உள்ள மேலும் சில முக்கிய அம்சங்கள் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதில் கூறப்பட்டள்ளதாவது:
தலைமை தேர்தல் ஆணையர், தேர்தல் ஆணையரை நியமிப்பதற்கு தகுதியான நபர்களை, மத்திய அமைச்சரவையின் செயலர் தலைமையிலான தேடுதல் குழு தான் பரிசீலிக்கும். மத்திய அரசின் செயலர் அந்தஸ்தில் உள்ள, தேர்தல் நடவடிக்கையில் நிபுணத்துவம் உள்ள நபர்களை பரிசீலித்து, அதில் குறிப்பிட்ட சிலரை, பிரதமர், லோக்சபா எதிர்க்கட்சி தலைவர், மத்திய அமைச்சர் ஆகியோர் அடங்கிய தேர்வுக்கு குழுவுக்கு பரிந்துரைக்கும்.
இந்த பரிந்துரை பட்டியலில் உள்ளவர்களில் ஒருவரை பிரதமர் தலைமையிலான குழு, தேர்தல் ஆணையராக தேர்வு செய்யும். இந்த பரிந்துரை பட்டியலில் இடம் பெறாதவர்களையும் தேர்வு செய்யும் அதிகாரம், பிரதமர் தலைமையிலான குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளது. லோக்சபாவில் எதிர்க்கட்சி அந்தஸ்து, எந்த குறிப்பிட்ட கட்சிக்கும் இல்லாவிட்டாலும், ஆளும் கட்சிக்கு அடுத்ததாக அதிக எண்ணிக்கையில் உறுப்பினர்கள் உள்ள கட்சியின் தலைவர் லோக்சபா எதிர்க்கட்சி தலைவராக கருதப்பட்டு, தேர்வுக்குழுவில் இடம் பெறுவார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement