திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவரின் 2 கைகளிலும் பிளாஸ்டிக் சர்ஜரி அறுவை சிகிச்சை 3 மணிநேரம் மேற்கொள்ளப்பட்டது. சென்னை ஸ்டான்லி மருத்துவமனையிலிருந்து வந்திருந்த சிறப்பு மருத்துவ குழுவினர் இந்த அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்தனர்.
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி பெருந்தெருவை சேர்ந்த பள்ளி மாணவர் சக மாணவர்களால் கடந்த 9-ம் தேதி இரவில் வீடு புகுந்து அரிவாளால் கொடூரமாக தாக்கப்பட்டார். இதை தடுத்த அவரது தங்கைக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. அவர்கள் இருவரும் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பாதிக்கப்பட்ட மாணவருக்கு இரண்டு கைகள், கால்கள், தலை உட்பட 8 இடங்களில் வெட்டுக்காயம் ஏற்பட்டது. இதுபோல் அவரது தங்கைக்கு கையில் வெட்டுக்காயம் ஏற்பட்டது.
பாதிக்கப்பட்ட மாணவனுக்கு உயர்தர சிகிச்சை அளிக்க முதல்வர் உத்தரவிட்டிருந்த நிலையில் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையின் ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை பிரிவு தலைவர் ஸ்ரீதேவி தலைமையில் மருத்துவர்கள் மகேஷ், ஸ்ரீதர் அடங்கிய குழுவினர் இன்று திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு வந்தனர். பாதிக்கப்பட்ட மாணவரை பரிசோதித்து, அவருக்கு ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை செய்தனர். 3 மணிநேரம் நடைபெற்ற இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதாக சிறப்பு மருத்துவ குழுவினரும், மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் ரேவதிபாலனும் தெரிவித்தனர்.
அவர்கள் கூறும்போது, “மாணவரின் உடலில் பல இடங்களில் காயம் மற்றும் எலும்பு முறிவு ஏற்பட்டிருந்தது. எலும்பு முறிவுக்கு முதல்கட்ட அறுவை சிகிச்சை ஏற்கனவே அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 2 கைகளிலும் ஏற்பட்ட காயத்தை ஆய்வுசெய்து உரிய ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. தசை நார்கள், ரத்த குழாய்கள் நரம்புகள் காயம்பட்டிருந்தது. அவற்றை இணைக்கும் பணிகள் நடைபெற்றது.
இடது கையில் 3 இடத்தில் வெட்டு காயம் வலது கையில் ஒரு இடத்தில் வெட்டு காயம் உள்ளது. மொத்தம் 7 முதல் 8 இடங்களில் வெட்டு காயம் உள்ளது. மருத்துவ நிபுணர் குழுவினர் தொடர்ந்து மாணவனை கண்காணித்து வருகின்றனர். குறைந்தபட்சம் 4 வாரம் மாணவருக்கு ஓய்வு தேவை. 4 வாரம் மாவு கட்டில் தான் இருப்பார். அதன்பிறகே ஒட்டுறுப்பு சிகிச்சையின் அடுத்த கட்ட நிலை தெரிய வரும். மாணவனின் தங்கை நன்றாக உள்ளார். அவருக்கு தசை நார் மட்டும் உருவி இருந்தது. மாணவன் மனநிலை கவுன்சிலிங் கொடுத்த பிறகு நன்றாக இருக்கிறது.
கிருமி தொற்று வராத பாதுகாப்பான அறையில் இருவரையும் வைத்துள்ளோம். எனவே பார்வையாளர்கள் வருவதை குறைத்து கொண்டு சிகிச்சைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என்று தெரிவித்தனர்.