நீட் தேர்வு மரணங்கள் – திமுக அளித்த போலி வாக்குறுதி: எடப்பாடி குற்றச்சாட்டு!

நீட் தேர்வு கொடுமையால் மாணவர்கள் தொடர்ந்து தற்கொலை செய்து வரும் நிலையில்

தமிழக அரசை விமர்சித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த மாணவர் ஜெகதீஸ்வரன் நீட் தேர்வு தோல்வியால் தற்கொலை செய்து கொண்டார். மகன் உயிரிழந்த சோகத்தில் தந்தை செல்வகுமாரும் தற்கொலை செய்து கொண்டார். தமிழகம் முழுவதும் மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது இந்த சம்பவம்.

நீட் தேர்வுக்கு எதிராக தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போதும் ஆளுநர் அதற்கு அனுமதி அளிக்கவே மாட்டேன் என்று கூறிவருகிறார். ஆனால் குடியரசு தலைவர் அனுமதிக்காக நீட் மசோதா சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

நீட் மரணங்கள் தொடர் கதையாகி வரும் நிலையில் தமிழ்நாடு எதிர்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி அறிக்கை ஒன்று வெளியிட்டு உயிரிழந்த ஜெகதீஸ், அவரது தந்தை செல்வ சேகர் ஆகியோருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார்.

ஆளுநரை வெளுத்து வாங்கிய முத்தரசன்? நீட் தேர்வு என்பதே பொய் என பேட்டி..

ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை கட்டாயம் ஒழித்துவிடுவோம், நீட் தேர்வை நீக்குவதற்கான சூட்சுமம் தங்களுக்கு தான் தெரியும் என்று பொய் வாக்குறுதிகள் அளித்து மக்களை ஏமாற்றி ஆட்சியைப் பிடித்ததாக முதல்வர் ஸ்டாலினையும் அவரது மகன் உதயநிதி ஸ்டாலினையும் கடுமையாக விமர்சித்துள்ளார்.

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அதிமுக அரசு நீட் நுழைவுத் தேர்வை எதிர்த்து தீர்மானம் இயற்றியது போல், இவர்களும் தீர்மானம் நிறைவேற்றினர்.

நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையில் ஒரு கமிஷன் அமைத்தனர். மீண்டும் ஆளுநர் கையொப்பம் பெற்று குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி இருப்பதாக தம்பட்டம் செய்கின்றனர். அதைத் தவிர, நீட் தேர்வுக்கு எதிராக இவர்கள் ஒன்றையும் செய்யவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழகத்தில் கூட்டணியுடன் கூடிய 38 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டுள்ள திமுக, இதுவரை ஒருமுறைகூட நீட் நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி நாடாளுமன்ற மக்களவையை ஒத்திவைக்கும் அளவுக்கு மத்திய அரசுக்கு அழுத்தம் தரவில்லை.

நீட் தேர்வு என்ற ஒன்றை வைத்து பலரின் உயிரோடு விளையாடி வரும் இந்த நிர்வாகத் திறமையற்ற ஆட்சியாளர்கள், இன்னும் எத்தனை உயிர்களைத்தான் பலிவாங்கப் போகிறார்கள் என்பது தெரியவில்லை என்று குறிப்பிட்டுள்ளார் எடப்பாடி பழனிசாமி.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.