“மீனவர் மாநாட்டை நடத்த திமுக-வுக்கு தகுதியில்லை!" – தூத்துக்குடியில் அண்ணாமலை

தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை ,’என் மண் என் மக்கள்’ என்ற பெயரில் நடை பயணத்தை கடந்த மாதம் 28-ம் தேதி ராமேஸ்வரத்தில் தொடங்கினார். சட்டசபை தொகுதி வாரியாக நடைபயணம் மேற்கொண்டு வரும் அவர், 27-வது தொகுதியாக தூத்துக்குடி சட்டசபைத் தொகுதியில் நடைபயணம் மேற்கொண்டார்.  நடைபயணத்தின் நிறைவில் பேசிய அவர், “தூத்துக்குடியில் 1962 வரை முத்துக்குளித்தல் நடந்துள்ளது. தூத்துக்குடியின் பெயருக்கு காரணமானது இந்த தொழில் தான். இந்த தொழிலை செய்த சுமார் 50 தொழிலாளர்கள் தற்போது இருக்கிறார்கள். அவர்கள் தங்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால், தமிழக அரசு அவர்களை கண்டு கொள்ளவில்லை. முத்துக்குளித்தல் தொழிலில் ஈடுபட்ட தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்க நாங்கள் நடவடிக்கை எடுப்போம்.

நடைபயணத்தில் அண்ணாமலை

இந்தியாவில் குஜராத்திற்கு அடுத்தபடியாக தமிழகத்தில் உப்பு உற்பத்தி அதிகமாக நடக்கும் மாவட்டம் தூத்துக்குடி. ”நாட்டின் உப்பு உற்பத்தியில் குஜராத் மாநிலம் 79 சதவீத பங்களிப்பை அளிக்கிறது. எனவே குஜராத் உப்பு உற்பத்தியாளர்களை பார்த்து நாம் கற்றுக் கொள்ள வேண்டும்” என அமைச்சர் கீதாஜீவன் கூறியுள்ளார். குஜராத்தில் கற்றுக் கொள்ள எதுவும் இல்லை. நமது உப்பு உற்பத்தியாளர்களை மாநில அரசு ஊக்கப்படுத்தினாலே போதும். தூத்துக்குடி உப்பு உற்பத்தியாளர்கள் முதலிடத்துக்கு வந்துவிடுவார்கள்.

பிரதமர் மோடி ஆட்சியில் தூத்துக்குடி துறைமுகம் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. 2013- 2014-ல் 28 மில்லியன் டன் சரக்குகளை கையாண்ட தூத்துக்குடி துறைமுகம் தற்போது 38 மில்லியன் சரக்குகளை கையாளும் அளவுக்கு வளர்ச்சி அடைந்துள்ளது. தூத்துக்குடி துறைமுக விரிவாக்கத்துக்கு மத்திய அரசு ரூ.7,164 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.  மேலும், நாகப்பட்டினம் – தூத்துக்குடி சாலை விரிவாக்கத்துக்கு ரூ.7000 கோடி, மதுரை – நாகர்கோவில்- தூத்துக்குடி ரயில் பாதை மேம்பாட்டுக்கு ரூ.1,890 கோடி, தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்கத்துக்கு ரூ.381 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நடைபயணத்தில் அண்ணாமலை

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.620 கோடியில் பணிகள் முடிவடைந்துள்ளது. ரூ.441 கோடியில் பணிகள் நடந்து வருகிறது. தூத்துக்குடியின் வளர்ச்சிக்கு  மத்தியரசு ஏராளமான திட்டங்களை தந்துள்ளது. ஆனால், தூத்துக்குடி எம்.பி., தூத்துக்குடியின் வளர்ச்சிக்காக எதையும் செய்யாமல், மத்திய அரசின் திட்டங்களை தடுக்கும் வேலைகளையே  செய்கிறார். கனிமொழி எம்.பி.,யை தூத்துக்குடி தொகுதிக்கு உள்ளேயே அடைத்து விட்டார்கள். இதனால் ஏற்பட்ட கோபத்தை மத்தியரசு மீது காட்டுகிறார். தனது இருப்பை காட்டுவதற்காக நாடாளுமன்றத்தில் எதைஎதையோ பேசுகிறார்.

தி.மு.க ஆட்சியில் தமிழகம் பின்னோக்கி செல்கிறது. எந்த புதிய தொழில் நிறுவனமும் தமிழகத்துக்கு வரவில்லை. இதனால் தென்தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை. தமிழகத்தில் சத்துணவில் அழுகிய முட்டை போடுவதால் மாணவர்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த 2 ஆண்டுகளில் 15 முறை அழுகிய முட்டையால் மாணவர்கள் வாந்தி மயக்கம் எடுத்து பாதிக்கப்பட்டுள்ளனர்.  தி.மு.க சார்பில் ராமேஸ்வரத்தில் இம்மாதம் மீனவர்கள் மாநாட்டை நடத்துகிறார்கள்.

அண்ணாமலை

மீனவர்களுக்கு எந்த திட்டத்தையும் செய்யாத இவர்கள் எப்படி மீனவர் மாநாட்டை நடத்த முடியும்? மீனவர்களுக்கு பிரதமர் மோடி ஏராளமான திட்டங்களை தந்துள்ளார். மீனவர்களை மீன் விவசாயிகள் என அறிவித்து கிசான் கடன் வழங்கியது, படகுகளுக்கு மானியம் என பல திட்டங்களை தந்துள்ளார். அதுபோல கடந்த 9 ஆண்டுகளில் இலங்கை கடற்படையினரால் ஒரு மீனவர்கள் கூட மரணமடையவில்லை. 2004 முதல் 2014 வரை காங்கிரஸ் ஆட்சியில் 81 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இதனை பிரதமர் மோடி முழுமையாக தடுத்து நிறுத்தியுள்ளார்.

மீனவர்களுக்கு 2 லட்சம் வீடு கட்டித் தருவோம் என திமுக தேர்தல் அறிக்கையில் கூறியது. ஆனால், ஒரு வீடு கூட இதுவரை கட்டவில்லை. மீன்பிடித் தடைக்கால நிவாரணம் ரூ.8000, புதிய மீன்வளக் கல்லூரி என பல திட்டங்களை அறிவித்தார்கள், ஆனால், எதையும் கொண்டுவரவில்லை. இவர்களுக்கு மீனவர் மாநாட்டை நடத்த எந்த தகுதியும் கிடையாது.  கனிமொழிக்கு  கட்சிக்குள் எந்த முக்கியத்துவமும் அளிக்கப்படவில்லை. அதனால், அவரை தூத்துக்குடி மக்களவைத் தொகுதிக்குள்ளேயே முடக்கி வைத்துள்ளார்.

நடைபயணத்தில் அண்ணாமலை

தூத்துக்குடியை எடுத்துக்கொண்டால் தி.மு.கவில் 30 ஆண்டுகள் மாவட்டச் செயலாளராகவும், எம்.எல்.ஏவாகவும் இருந்த என்.பெரியசாமியின் மகள் கீதாஜீவன்தான் தூத்துக்குடி தொகுதியின் எம்.எல்.ஏவாகவும், அமைச்சராகவும் உள்ளார். அவரது தம்பி ஜெகன்தான் மாநகராட்சி மேயராக உள்ளார். அப்பா, மகள்,மகன் என வழிவழியாக பதவிகளை வகித்து வருகிறார்கள். இதில் யார் பெரியவர் என்பதில் அக்கா, தம்பிக்கு இடையே அதிகார மோதல் போக்கு நிலவி வருகிறது. இவர்களின் சண்டையை தீர்த்து வைப்பதிலேயே அரசு அதிகாரிகளின் நேரம் வீணாகிறது.  இவர்களால் தூத்துக்குடி எந்த வகையிலும் முன்னேற்றம் அடையவில்லை” என்றார்.    

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.