1989 சட்டமன்றத்தில் என்ன நடந்தது? திருநாவுக்கரசர் கருத்துக்கு ஜெயக்குமார் எதிர்ப்பு!

மக்களவையில் மணிப்பூர் விவகாரம் பற்றி திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பிய நிலையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 1989ஆம் ஆண்டு ஜெயலலிதாவை சட்டசபையில் தாக்கிய திமுகவுக்கு மணிப்பூர் பற்றி பேச தார்மீக உரிமையில்லை என்று பேசினார்.

அதைத் தொடர்ந்து 1989இல் சட்ட சபையில் என்ன நடந்தது என்பது குறித்த விவாதம் சமூக வலைதளங்களில் கிளம்பியது. 13 ஆண்டுகளுக்குப் பின்னர் திமுக ஆட்சிக்கு வந்த போது முதலமைச்சரும் நிதியமைச்சருமான கலைஞர் கருணாநிதி பட்ஜெட் தாக்கல் செய்ய வந்த போது ஜெயலலிதா எழுந்து பட்ஜெட்டை வாசிக்க கூடாது என்று கூறியதாகவும், அதற்கு ஜெயலலிதாவுக்கும் கலைஞருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டதாகவும் தற்போதைய காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசு கூறினார்.

அவர் அப்போது அதிமுகவில் ஜெயலலிதாவுக்குக்கு அரணாக நின்றிருந்தார். அதிமுகவை சேர்ந்த எம்.எல்.ஏ ஒருவர் கலைஞர் வாசித்துக் கொண்டிருந்து பட்ஜெட் உரையை பிடித்து இழுத்ததாகவும் அதனால் அவர் நிலைதடுமாறி விழுந்ததாகவும் கூறினார். இதனால் கலைஞர் தாக்கப்பட்டுவிட்டார் என்று நினைத்த திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அதிமுகவினரை நோக்கி பட்ஜெட் புத்தகங்களை தூக்கி எறிந்தனர்.

கலைஞர் நினைவு நாளை முன்னிட்டு பேரணி

இருதரப்பிலும் தள்ளுமுள்ளு நடைபெற்றது. ஜெயலலிதா மீது புத்தகங்கள் விழாமல் நான் சூழ்ந்துகொண்டேன். புத்தகங்கள் பட்டு அவர் தலைமுடி கலைந்தது உண்மை. ஆனால் அவர் சேலை கிழிக்கப்பட்டது என்பதில் உண்மை இல்லை. அதேபோல் கலைஞர் தாக்கப்பட்டார் என்பதிலும் உண்மை இல்லை” என்று திருநாவுக்கரசர் கூறினார்.

ஜெயலலிதாவின் சேலை கிழிக்கப்படவில்லை என்று கூறியதால், திருநாவுக்கரசரை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்து வருகிறார்.

இன்று அவர் செய்தியாளர்களைச் சந்தித்த போது, “காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர், ஏற்கெனவே அதிமுக விலிருந்து புரட்சித் தலைவரால் அடையாளம் காட்டப்பட்டவர். புரட்சித் தலைவி அம்மா அவர்களால்கூட அடையாளம் காட்டப்பட்டவர். அப்படிபட்ட அவர் கடமைப்பட்டிருக்க வேண்டியது அதிமுகவிற்கு தான். ஆனால் அதைவிடுத்து இன்று உண்ட வீட்டிற்கே ரெண்டகம் செய்கின்ற வேலையை செய்துவருகிறார்.

அவர் அதிமுகவில் இருந்ததை நினைத்துப் பார்த்தால் வருத்தமும் வேதனையும் தோன்றுகிறது. வரலாற்றுக்கு புறம்பான வகையில் உண்மையை மறைத்து பேசுவது திருநாவுக்கரசருக்கு அழகல்ல” என்று ஜெயக்குமார் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.