புதுடில்லி : செயற்கை கருவுறுதலுக்காக வந்த பெண்ணின் கரு முட்டைகளை, வேறு இரண்டு பெண்களுக்கு அனுமதியில்லாமல் அளித்த, புதுடில்லி எய்ம்ஸ் டாக்டருக்கு மன்னிப்பு அளித்து தேசிய மருத்துவ கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.
புதுடில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் செயற்கை கருவூட்டலுக்காக, பெண் ஒருவர், 2017ல் அனுமதிக்கப்பட்டார். அவரிடமிருந்து, 30 கரு முட்டைகள் சேகரிக்கப்பட்டன. இதில், 14 கரு முட்டைகளை, சிகிச்சைக்காக வந்த வேறு இரண்டு பெண்களுக்கு, டாக்டர் பயன்படுத்தியுள்ளார்.
இது தொடர்பான புகாரை விசாரித்த புதுடில்லி மருத்துவ கவுன்சில், அந்த பெண் டாக்டரின், ‘லைசென்சை’ ஒரு மாதத்துக்கு தற்காலிகமாக ‘சஸ்பெண்ட்’ செய்து கடந்தாண்டு செப்.,ல் உத்தரவிட்டது.
இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த, தேசிய மருத்துவக் கமிஷன் சமீபத்தில் அளித்துள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:
இந்த பெண் டாக்டர் செய்தது, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் விதிகளின்படி விதிமீறலாகும். இருப்பினும், கரு முட்டை இல்லாததால், அந்த இரண்டு பெண்களுக்கும், மற்றொரு பெண்ணின் கரு முட்டைகளை அவர் அளித்துள்ளார்.
இதனால் எந்த ஒரு தனிப்பட்ட பலனையும் அந்த டாக்டர் பெறவில்லை. செயற்கை கருவூட்டல் முறையில், அவர் மிக நீண்ட காலம் சிறப்பாக செயல்பட்டுள்ளார். அதை மனதில் வைத்து, எச்சரிக்கையுடன் அவர் விடுவிக்கப்படுகிறார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement