இந்தியாவின் வடமாநிலங்களில், தென் மேற்குப் பருவமழை தொடங்கியதிலிருந்து கனமழை பெய்துவருகிறது. டெல்லி, உத்தரப்பிரதேசம், பஞ்சாப், ஹரியானா, பீகார் எனப் பல மாநிலங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கடந்த சில நாள்களாக மலைப்பிரதேசமான இமாச்சலப் பிரதேசத்திலும் பரவலாகக் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டதில், வீடுகள் மண்ணில் புதைந்தன. தொடர்ந்து கனமழை பெய்துவருவதாலும், அடுத்தடுத்து நிலச்சரிவுகள் ஏற்படுவதாலும் மக்களின் இயல்புவாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில், இமாச்சலப் பிரதேச மாநில முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “கடந்த ஜூலை மாதம் பெய்த மழையிலும், இந்தப் பருவமழையிலும் பெரும் சேதம் ஏற்பட்டிருக்கிறது. சேதமடைந்த இமாச்சலப் பிரதேசத்தின் உள்கட்டமைப்பை சீரமைக்க ஒரு வருடம் ஆகும். பல இடங்களில் நிலச்சரிவு, வெள்ளம் காரணமாக இதுவரை குறைந்தது 61 பேர் பலியாகியிருக்கின்றனர். இந்த மழை பாதிப்பில் சுமார் ரூ.10,000 கோடி மதிப்பளவிலான இழப்பு ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. சிம்லாவிலுள்ள சம்மர் ஹில்ஸ், கிருஷ்ணா நகர், பாக்லி ஆகிய இடங்களில் நிலச்சரிவுகளில் சிக்கி, பலர் இறந்திருக்கிறார்கள்.
இன்று காலை சம்மர் ஹில்ஸிலிருந்து 13 உடல்கள் மீட்கப்பட்டிருக்கின்றன. கிருஷ்ணா நகரில் நேற்று மாலை ஏற்பட்ட நிலச்சரிவில் எட்டு வீடுகள் அடித்துச் செல்லப்பட்டிருக்கின்றன. அதில் இரண்டு பேர் உயிரிழந்தனர். மேலும் பல வீடுகள் காலி செய்யப்பட்டிருக்கின்றன. சோலன் மாவட்டத்தில் திங்கள்கிழமை ஏழு பேர் உயிரிழந்திருக்கின்றனர். 800-க்கும் மேற்பட்டோர் தாழ்வான பகுதிகளிலிருந்து மீட்கப்பட்டு, பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றுவதற்கான பணிகள் நடந்து வருகின்றன. கங்க்ரா மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை இன்று வான்வழியிலிருந்து ஆய்வு செய்திருக்கிறோம்.

மழையால் அதிக சேதம் ஏற்பட்டிருக்கும் பகுதிகளைச் சீரமைக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஒரு வருடத்துக்குள் உள்கட்டமைப்பை முழுமையாக மீட்டெடுக்க வேண்டும். இதை மனதில்கொண்டே செயல்படுகிறேன். நான்கு ஆண்டுகளில் இமாச்சலப் பிரதேசத்தை தன்னம்பிக்கைமிக்க மாநிலமாகவும், 10 ஆண்டுகளில் நாட்டின் மிகச் சிறந்த மாநிலமாகவும் மாற்றுவதற்கான தொலைநோக்குப் பார்வையுடன் மாநில அரசின் நடவடிக்கைகள் தொடரும்.
இமாச்சலப் பிரதேசம் முழுவதும் உள்ள அனைத்துப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு ஆகஸ்ட் 19-ம் தேதிவரை விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. தேசிய பேரிடர் மீட்புப் படையின் இரண்டு குழுக்கள் சிம்லா மற்றும் கங்க்ராவில் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றன. இமாச்சலப் பிரதேசத்தைப் பேரிடர் பாதித்த மாநிலமாகப் பிரதமர் மோடி அறிவிக்க வேண்டும்” எனத் தெரிவித்திருக்கிறார்.