புதுடில்லி:டில்லி பல்கலையில் ‘ராகிங்’ முற்றிலும் இல்லை; மாணவர்கள் ஒருவருக்கொருவர் சகோதர மனப்பான்மைடன் பழகுகின்றனர்,”என, டில்லி பல்கலை துணைவேந்தர் யோகேஷ் சிங் கூறினார்.
டில்லி பல்கலையின் கீழ் செயல்படும் அனைத்துக் கல்லூரிகளிலும் 2023 – 20-24ம் கல்வி ஆண்டுக்கான வகுப்புகள் நேற்று துவங்கின.
இளங்கலையில் சேர்ந்துள்ள புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. அதில், துணைவேந்தர் யோகேஷ் சிங் பேசியதாவது:
மாணவர்கள் எந்தக் கவலையும் இல்லாமல் கல்லூரிகளுக்குச் செல்லலாம். டில்லி பல்கலையின் கீழ் செயல்படும் எந்தக் கல்லூரியிலும் ‘ராகிங்’ கிடையாது. மூத்த மாணவர்கள், சகோதர மனப்பான்மையுடன் புதியவர்களுடன் பழகுவர்.
டில்லி பல்கலையில் நேற்று முன் தினம் நடந்த பொது ஒதுக்கீட்டின் இரண்டாம் சுற்றுவரை, 64,288 மாணவர்கள் இளங்கலை பாடங்களில் சேர்ந்துள்ளனர். முதல் மற்றும் இரண்டாம் சுற்றில் ஒரு லட்சத்து 5,426 மாணவர்களுக்கு இடங்கள் வழங்கப்பட்டன.
டில்லி பல்கலை கல்லூரிகளில் சேரும் மாணவியர் எண்ணிக்கை 53 சதவீதமாகவும், மாணவர் 47 சதவீதமாகவும் உள்ளன.
இவ்வாறு அவர் பேசினார்.
தங்குமிடம் தேடல்
பள்ளிப் படிப்பு முடித்து, முதன்முதலாக கல்லூரியில் காலடி வைக்கும் பல மாணவ – மாணவியர் தங்கள் பெற்றோருடன் வந்திருந்தனர். உ.பி., பீஹார், உத்தரகண்ட் உட்பட வெளிமாநிலங்களில் இருந்து வந்திருந்த பெற்றோர் தங்கள் குழந்தைக்கு சரியான தங்குமிடம் தேடுவதில் ஆர்வமாக இருந்தனர். இந்திய தேசிய மாணவர் சங்கம், இந்திய மாணவர் கூட்டமைப்பு மற்றும் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் ஆகிய மாணவர் அமைப்புகள், புதிய மாணவர்கள் தங்குமிடங்களுக்கு உதவ உதவி மையங்கள் அமைத்திருந்தன.கல்லூரி துவக்க நாளை முன்னிட்டு, பல்கலை வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. புதிய மாணவர்களை அந்தந்த கல்லூரிகளுக்கு அழைத்துச் செல்ல போலீசார் உதவி செய்தனர்.பல்கலை வளாகம் முழுதும், அரசியல் தலைவர்களின் பெரிய பதாகைகள் மாணவர் அமைப்புகளால் வைக்கப்பட்டு இருந்தன. டில்லி பல்கலை கல்லூரிகளுக்கு இந்த ஆண்டு ‘கியூட்’ எனப்படும் தேசிய அளவிலான பொதுப் பல்கலை நுழைவுத் தேர்வு வாயிலாக மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement