புதுடில்லி : ”எந்தவொரு வழக்காக இருந்தாலும், அதில் நீதியை நிலைநாட்டும் நோக்கத்துடனேயே நீதிபதிகள் செயலாற்ற வேண்டும்,” என, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் குறிப்பிட்டுள்ளார்.
சுதந்திர தினத்தையொட்டி, புதுடில்லியில் உச்ச நீதிமன்ற வளாகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.
மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மெஹ்வால் உள்ளிட்டோர் பங்கேற்ற நிகழ்ச்சியில், தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பேசியதாவது:
எந்தவொரு வழக்காக இருந்தாலும், அதன் முடிவு எப்படி இருந்தாலும், நீதியை நிலைநாட்டுவதே, நீதித்துறையின் அடித்தளமாகும்.
தன்னிச்சையான கைதுகள், வீடுகளை இடிப்பதாக மிரட்டல், சட்ட விரோதமாக சொத்துக்கள் முடக்கம் போன்ற எந்தவொரு விவகாரமாக இருந்தாலும், மக்களின் நம்பிக்கையை பிரதிபலிக்கும் வகையில், அவர்களுடைய குரலாக, நீதிமன்றங்களின் உத்தரவு இருக்க வேண்டும்.
கடந்த, 76 ஆண்டுகளாக, சாதாரண மக்களின் போராட்டங்களில் நீதித் துறை துணை நின்று வந்துள்ளது. நீதியை அடைவதற்கு மக்களுக்கு எந்தத் தடையும் இருக்கக் கூடாது. நாட்டின் கடைசி நபர் வரை அனைவரும் நீதிமன்றங்களை நாடுவதற்கான வழிகளை செய்ய வேண்டும்.
உச்ச நீதிமன்றத்தில், கூடுதலாக, 27 நீதிமன்ற அறைகள், நான்கு பதிவாளர் அறைகள், வழக்கறிஞர்கள் மற்றும் வழக்கு தொடுப்போருக்கு கூடுதல் வசதிகளுடன் கூடிய கட்டடம் கட்டப்பட உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
பிரதமர் மோடி பாராட்டு!
செங்கோட்டையில் நேற்று நடந்த சுதந்திர தின விழாவில் பேசுகையில், நீதித் துறையின் செயல்பாடுக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்தார். அவர் பேசியதாவது:தாய்மொழிகளில் கல்வி கற்பிக்க வேண்டும் என்பதை நாம் வலியுறுத்தி வருகிறோம். உச்ச நீதிமன்றம் இந்த விஷயத்தில் ஒரு படி மேலே சென்றுள்ளதற்கு பாராட்டு. வழக்குகளின் தீர்ப்புகளை, வழக்கு தொடர்ந்தோரின் தாய் மொழியில் மொழிபெயர்க்கும் நடவடிக்கையை உச்ச நீதிமன்றம் எடுத்துள்ளது.இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.அப்போது, அங்கிருந்த தலைமை நீதிபதி, டி.ஒய்.சந்திரசூட், கைகளை குவித்து அதற்கு நன்றி தெரிவித்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்