பெங்களூரு:இலகுரக போர் விமான தரவுகளை திருடி, ‘டார்க்வெப்’ இணையத்தில் பதிவிட்ட இன்ஜினியர் மீதான வழக்கை ரத்து செய்ய, கர்நாடக உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.
ஆந்திர மாநிலம், குண்டூரைச் சேர்ந்தவர் சிவராம கிருஷ்ண சென்னுபொய்னா, 27. ஏரோநாட்டிகல் இன்ஜினியர். பெங்களூரில் உள்ள எச்.ஏ.எல்., விமான ஆராய்ச்சி மற்றும் வடிவமைப்பு மையத்தில், பயிற்சியாளராக பணியாற்றினார்.
அப்போது, மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின், ‘தேஜாஸ்’ திட்டத்தின் கீழ் வடிவமைக்கப்பட்ட இலகுரக விமானத்தின் தரவுகளை திருடி, நிதி ஆதாயத்துக்காக, ‘டார்க்வெப்’ இணையத்தில் பதிவிட்டு இருந்தார்.
இது குறித்து, ஏரோநாட்டிகல் டெவலப்மென்ட் ஏஜன்சி, 2021ல், சி.ஐ.டி., சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தது.
நான்கு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த போலீசார், 2022ல் சிவராம கிருஷ்ண சென்னு பொய்னாவை கைது செய்தனர். சில மாதம் சிறைவாசம் அனுபவித்த அவருக்கு ஜாமின் கிடைத்தது.
இந்நிலையில், தன் மீது பதிவான வழக்கை ரத்து செய்ய கோரி, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு செய்தார். தன் மீது தாமதமாக வழக்குப்பதிவு செய்யப்பட்டதாகவும், குற்ற வளையத்திற்குள் கொண்டு வரும் வகையில், எந்த தவறும் செய்யவில்லை என்றும் மனுவில் குறிப்பிட்டு இருந்தார். இந்த மனு மீது விசாரணை நடந்து வருகிறது.
நேற்று முன்தினம் நீதிபதி நாகபிரசன்னா பிறப்பித்த உத்தரவு:
தேசத்தின் பாதுகாப்பை சீர்குலைக்கும் வகையில், மிக முக்கியமான தரவுகளை மனுதாரர், ‘டார்க்வெப்’பில் கசிய விட்டுள்ளார். ‘டார்க்வெப்’ என்பது குற்றவாளிகள், தனி நபர்கள் பயன்படுத்தப்படும் ஒரு அதிநவீன இணையதளம். அதன் பயன்பாட்டை ஒழுங்குபடுத்துவது, காலத்தின் தேவையாக மாறியுள்ளது.
டார்க்வெப் பயன்படுத்துவது தேசிய பாதுகாப்பிற்கு பேரழிவு தரும். தரவுகளை திருடி விற்பது இந்தியா உட்பட, பல நாடுகளுக்கு கவலை அளிப்பதாக உள்ளது. நிதி ஆதாயங்களுக்காக தேசத்தின் பாதுகாப்பு தொடர்பான, முக்கிய தரவுகளை திருடி அதை ‘டார்க்வெப்’ உள்ளிட்ட, இணையதளங்களில் பதிவேற்றம் செய்யும் நபர்களை கண்டறிந்து, அவர்களை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும்.
மனுதாரர் மீதான வழக்கு விசாரணையை, ஒரே இரவில் முடிக்க முடியாது. இந்த வழக்கு பல சிக்கலான உண்மைகளை உள்ளடக்கியது. தாமதமாக தன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது என்ற, மனுதாரரின் வாதத்தை வைத்து, அவர் மீது பதிவான வழக்கை, ரத்து செய்ய முடியாது. விசாரணை இன்னும் முடியவில்லை.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டு, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்