ஹைதராபாத்: பெற்றோரை இழந்து தவித்த ஒரு மாணவியை பொறியியல் படிப்பு படிக்க வைத்தார் தெலங்கானா அமைச்சர் கே.டி. ராமாராவ். தற்போது அப்பெண் ஹைதராபாத்தில் ஐடி துறையில் சேர்ந்து நல்ல வேலையில் உள்ளார்.
இந்நிலையில், தன்னை போல் பெற்றோர், உறவினர்களை இழந்து தவிப்போருக்கு உதவும்படி அப்பெண், முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ. 1 லட்சம் நிதி உதவி செய்துள்ளார். அப்பெண்ணின் மனிதாபிமானத்தை அமைச்சர் கே.டி. ராமாராவ் வெகுவாக புகழ்ந்துள்ளார்.
தெலங்கானா மாநிலம், ஜெகித்யாலா மாவட்டம், தண்ட்ரியால் கிராமத்தை சேர்ந்த இளம் பெண் ருத்ரா ரச்சனா. சில ஆண்டுகளுக்கு முன், இவரது பெற்றோர் விபத்தில் உயிரிழந்தனர். அந்த விபத்தில் உயிர் தப்பிய ருத்ரா ரச்சானாவை மருத்துவமனைக்கு சென்று சந்தித்து அமைச்சர் கே.டி. ராமாராவ் நம்பிக்கை ஊட்டினார். மனம் தளர வேண்டாம் என அறிவுறுத்தினார்.
அதன் பின்னர், அமைச்சர் கே.டி.ராமாராவ், அப்பெண் பொறியியல் படிக்க அரசு சார்பில் உதவிகளை செய்தார். இதனிடையே, ஒவ்வொரு ராக்கி பண்டிகையின் போது, அப்பெண், அமைச்சர் கே.டி. ராமாராவுக்கு ராக்கி கட்டி செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார். இந்நிலையில், ருத்ரா ரச்சனா பொறியியல் படிப்பை முடித்து ஹைதராபாத்தில் உள்ள ஒரு ஐடி நிறுவனத்தில் நல்ல வேலையில் சேர்ந்தார்.
சம்பளத்தில் இருந்து..: இந்த நிலையில் அந்த பெண் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்ட செய்தியில், ‘‘என்னைப் போன்று பெற்றோர்களை இழந்து ஆதரவற்றவர்களுக்கு உதவி செய்து வரும் கே.டி. ராமாராவ் அவர்களுக்கும், முதல்வர் கே. சந்திரசேகர ராவ் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். என் வாழ்நாள் முழுவதும் அவர்களுக்கு கடமைப்பட்டுள்ளேன். என்னை போன்று கஷ்டப்படுவோருக்காக படிக்க என்னுடைய ஊதியத்தில் சேர்த்து வைத்திருந்த ரூ.1 லட்சத்தை முதல்வர் நிவாரண நிதிக்கு அனுப்பி உள்ளேன்’’ என்று கூறி அமைச்சர் கே.டி. ராமாராவுக்கு ராக்கி கட்டும் புகைப்படத்தையும் இணைத்துள்ளார்.
இதனை பார்த்த, அமைச்சர் கே.டி. ராமாராவ் ‘‘எவ்வளவு அற்புதமான மனிதாபிமான செயலை நீ செய்திருக்கிறாய். உன்னை நினைத்து நான் பெருமைப்படுகிறேன்’’ என்று தெரிவித்துள்ளார். இந்த ட்வீட் தற்போது தெலங்கானாவில் வைரல் ஆகி வருகிறது.