பாலக்காடு: கேரள மாநிலம், பாலக்காடு அருகே, ஓய்வூதிய பணத்தில், அந்தமானில் இருந்து யானைக்குட்டி வாங்கி, குழந்தையை போன்று வளர்க்கும் வயதான தம்பதியர் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளனர்.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், ஸ்ரீகிருஷ்ணபுரத்தைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன், 84; ஓய்வு பெற்ற ஊராட்சி செயலர். இவரது மனைவி பாருக்குட்டி, 75; ஓய்வு பெற்ற மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்.
இவர்களுக்கு, கொச்சு நாராயணன், ராஜேஷ், ரமேஷ் என்ற மூன்று மகன்களும், ரமா என்ற மகளும் உள்ளனர். இவர்களில் கொச்சு நாராயணன் மற்றும் ரமா பெற்றோர் வீட்டின் அருகே வசிக்கின்றனர். ராஜேஷ், ரமேஷ் பெங்களூரில் வசிக்கின்றனர்.
யானை மீதான பிரியத்தால், ராமகிருஷ்ணன் – -பாருக்குட்டி தம்பதியர், யானை வளர்க்க ஆசைப்பட்டனர். கடந்த 2001ல், பாருக்குட்டி ஓய்வு பெற்ற போது கிடைத்த ஓய்வூதியத்தில் இருந்து, 5 வயதான ஆண் குட்டி யானையை வாங்கி வளர்க்க துவங்கினர்.
தற்போது, 27 வயதான, ‘விஜய்’ என பெயரிடப்பட்ட யானை தான் இவர்களுக்கு உலகம்.
வீட்டு வளாகத்தில் பராமரித்து வளர்க்கப்படும் யானைக்கு மூன்று பாகன்கள் இருந்தாலும், வயதான தம்பதியரே தினமும் பாசத்துடன் உணவு ஊட்டி விடுகின்றனர். காலை நேரத்தில், யானைக்கு பிடித்த வெல்லம் அளிக்க தாமதமானால், சப்தமாக பிளிறி அழைத்து வெல்லம் வாங்கி சாப்பிட்ட பிறகே அமைதியாகும் என்கின்றனர் தம்பதியர்.
ராமகிருஷ்ணன்- – பாருக்குட்டி தம்பதியர் கூறியதாவது:
யானை வளர்க்க வேண்டும் என்பது எங்கள் ஆசை. யானையை வாங்க அந்தமான் சென்றோம். அங்கு தாய் யானை மதுமிதாவுடன் குறும்புத்தனமாக விளையாடிக் கொண்டிருந்த, 5 வயது குட்டி யானையை விலைக்கு வாங்கி, உரிம பத்திரம் உட்பட அனைத்து சான்றிதழ்களுடன் கப்பலில் கொண்டு வந்தோம்.
அதற்கு விஜய் என பெயர் சூட்டினோம். இப்போது, அவனுக்கு 27 வயதாகிறது. நாங்கள், 22 ஆண்டுகளாக குழந்தையை போன்று வளர்க்கிறோம். அவனுக்கு தேவையான உணவை, எங்கள் நிலத்தில் விளைவிக்கிறோம்.
மாநிலத்தில் உள்ள அனைத்து பிரபல கோவில் திருவிழா அணிவகுப்புகளிலும் விஜய் கலந்து கொள்வான். திருவிழாக்களுக்கு சென்று திரும்பும் போது, அவனுக்காக காத்திருக்கும் எங்களை கண்டதும், தலையை குலுக்கி துதிக்கை துாக்கிக்கொண்டு ஓடி வருவான். அவன் எங்களின் ஐந்தாவது குழந்தை. இவ்வாறு தம்பதியர் கூறினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்