‘யார் அடுத்த சூப்பர் ஸ்டார்?’ என்ற கேள்வி பல வருடங்களாக கோலிவுட்டில் நிலவும் கேள்வி. அந்த காலம் போய், ‘யார் சூப்பர் ஸ்டார்?’ என்ற கேள்வி – பதிலில் நனைந்தேவிட்டது தமிழ் சினிமா. இது ஒரு பக்கம் இருக்கட்டும். பேன் இந்தியா பக்கம் வருவோம்.
ஒரு படம் எல்லா மொழிகளிலும் வெளியானால் அது பேன் இந்தியா படம் என்றார்கள். அப்படியான படங்களில் நடிக்கும் நாயகர்களை பேன் இந்தியா ஹீரோக்கள் என்றார்கள். ஆனால், அது உண்மையல்ல. பேன் இந்தியா என்பது வர்த்தக ரீதியாக பயன்படுத்தும் வார்த்தையே தவிர, கன்டன்ட்தான் கிங் என்றனர், சினிமா ஆர்வலர்கள். பிறகு, பேன் இந்தியா என்ற டேகிற்குள் வரவேண்டும் என்பதற்காக, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஒவ்வொரு மொழியிலிருந்தும் நடிகர்களை ஒப்பந்தம் செய்து அந்தந்த ஊர்களில் வெளியிடும்போது, படத்தை இன்னும் அவர்களோடு தொடர்புபடுத்திக் கொள்வர். அதற்கான வரவேற்பும் அதிகம் கிடைக்கும் என நினைத்து நடிகர்களை கமிட் செய்கின்றனர். அதற்கு உதாரணங்களாகப் பல படங்களைச் சொல்லலாம்.

ஆனால், பேன் இந்தியா படம் அல்லது பேன் இந்தியா ஸ்டார் என்பது என்ன ? ஒரு படத்தின் கன்டன்ட் எல்லா மொழிக்கு ஏற்றவாறு அமைந்திருக்க வேண்டும். எல்லா மொழி மக்களுக்கும் அது தொடர்புப்படுத்தி கொள்ளும்படி இருக்க வேண்டும் என்பதுதான். ஒரு நடிகனை எல்லா மொழி மக்களும் தங்கள் ஊர்க்காரராக நினைத்துக் கொள்ளும் அளவுக்கு அந்த நடிகர் அந்த மொழி மக்களோடு ஒன்றியிருந்து, அந்தந்த மொழியிலேயே டப் செய்து நடிக்கும் நடிகர்களே உண்மையான பேன் இந்தியா ஸ்டார். அதற்கு சமீபத்திய சிறந்த உதாரணம், துல்கர் சல்மான்.
இந்திய சினிமாவில் எத்தனையோ நடிகர்கள் தங்களின் மார்கெட்டை விரிவடையச் செய்ய தீவிரமாகக் களமாடிக் கொண்டிருக்கிறார்கள். மற்ற ஊர்களுக்குச் சென்று தங்களின் படத்தை புரோமோட் செய்து வருகிறார்கள். ஆனால், அந்தப் படத்தின் இயக்குநரோ, ஹீரோவோ ஒரே மொழியைச் சேர்ந்தவர்களாகத்தான் பெரும்பாலும் இருக்கிறார்கள். சில படங்கள் மட்டும் தமிழ் இயக்குநர் – தெலுங்கு ஹீரோ அல்லது தெலுங்கு இயக்குநர் – தமிழ் ஹீரோ எனக் கூட்டணி மாறும். ஹீரோ எந்த மொழியாக இருந்தாலும் அந்த இயக்குநரின் ஸ்டைல் என்னவோ அது அந்த மொழிப் படமாகத்தான் தெரியும். உதாரணம், ‘வாரிசு’, ‘வாத்தி’. ‘RRR’, ‘புஷ்பா’ மாதிரியான படங்கள் எத்தனை மொழியில் வெளியானாலும் அது தெலுங்கு பட ஃப்ளேவரில்தான் இருக்கும். இவை எல்லாவற்றிலும் இருந்து துல்கர் சல்மான் மாறுபடுகிறார். அவர் நடிக்கும் படங்களும் மாறுபடுகின்றன.

மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி எனப் பல மொழிகளில் பயங்கர பிஸியாக இருக்கிறார், துல்கர் சல்மான். இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், அவர் எந்த மொழியில் நடித்தாலும் அந்தந்த மொழி இயக்குநர்கள்தான் இயக்குகிறார்கள். கடந்த வருடத்தில், பிருந்தா இயக்கத்தில் ‘ஹே சினாமிகா’ (தமிழ்), ஹனு ராகவாபுடி இயக்கத்தில் ‘சீதா ராமம்’ (தெலுங்கு) ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கத்தில் ‘சல்யூட்’ (மலையாளம்), பால்கி இயக்கத்தில் ‘Chup – Revenge of the Artist’ (இந்தி) ஆகிய படங்கள் வெளியாயின. எல்லா படங்களுக்கும் நல்ல ஓப்பனிங் கிடைத்தது. சீதா ராமம் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்த நான்கு படங்களின் இயக்குநர் நான்கு வெவ்வேறு மொழிகளைச் சேர்ந்தவர்கள்.
அப்படியே இந்த வருடம் பார்த்தால், இந்தியில் ராஜ் & டிகே இயக்கத்தில் ராஜ்குமார் ராவோடு ‘Guns and Gulaabs’ எனும் வெப் சீரிஸ், அபிலாஷ் ஜோஷி இயக்கத்தில் மலையாளத்தில் ‘King of Kotha’. இந்த இரண்டுமே மற்ற மொழிகளிலும் டப் செய்யப்பட்டிருக்கின்றன. இதன் பிறகு, டோலிவுட் இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் ‘லக்கி பாஸ்கர்’, ‘The Hunt for Veerappan’ எனும் ஆவணப்படத்தை இயக்கிய செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் ‘காந்தா’, அட்லியிடம் உதவி இயக்குநராக இருந்த கார்த்திக் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கிறார். இவை தவிர, சுதா கொங்கரா இயக்கத்தில் ஒரு படம் நடிக்கிறார் என்ற தகவல்களும் வெளியாகியிருக்கின்றன. இன்னும் பேச்சு வார்த்தையில் பல படங்கள் இருக்கின்றன என்கிறார்கள். ஆக, துல்கர் சல்மானின் கால்ஷீட் கிடைக்க பல இயக்குநர்கள் காத்திருக்கிறார்கள்.

‘King of Kotha’ படத்தின் விழாவில் நடிகர் நானி பேசும்போது, ‘பேன் இந்தியா ஸ்டார்னா அது துல்கர் மட்டும்தான். மலையாள இயக்குநர், தெலுங்கு இயக்குநர், தமிழ் இயக்குநர், இந்தி இயக்குநர் என எல்லா மொழி இயக்குநர்களும் துல்கருக்கு, துல்கருக்காகவே கதை எழுதுகிறார்கள். இதுதான் பேன் இந்தியா நடிகருக்கான இலக்கணம். ஆக, பேன் இந்தியா ஸ்டார் என்பது துல்கர்தான்’ என்றார். அது நூற்றுக்கு நூறு உண்மைதான்.
கலக்குங்க துல்கர் ! அடிபொலி !!!