புதுடெல்லி: இந்தியாவில் பாலியல் குற்றங்கள் தொடர்பான சட்டங்களின்படி, 18 வயதுக்குட்பட்ட சிறுமியுடன் 18 வயது தாண்டிய இளைஞன், பரஸ்பர ஒப்புதலின் அடிப்படையிலும்கூட பாலியல் உறவு கொள்வது குற்றமாகும்.
இருவரும் பரஸ்பர புரிதலின் அடிப்படையில் உறவு கொண்டு, அந்த சிறுமி கர்ப்பமாகும்பட்சத்தில், அந்தச் சிறுமியின் பெற்றோர் காவல் துறையில் புகார் அளித்தால், உறவில் ஈடுபட்ட ஆணுக்கு சிறை தண்டனை விதிக்கப்படும். இந்தச் சூழலில், பரஸ்பர ஒப்புதலின்பேரில் உறவு கொள்வதை குற்றமற்றதாக அறிவிக்க வேண்டும் என்று வழக்கறிஞர் ஹார்ஷ் விபோல் சிங்கால் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில், இம்மனு குறித்து மத்திய அரசின் பதிலை உச்ச நீதிமன்றம் கோரியுள்ளது.
பல்வேறு நாடுகளில் 16 – 18 வயதுக்குட்பட்ட சிறுமியுடன் 18 -19 வயதுக்குட்பட்ட இளைஞர், பரபஸ்பர ஒப்புதலின்பேரில் உறவு கொண்டால் அது குற்றமாக கருதப்படுவதில்லை. இது ரோமியோ ஜூலியட் சட்டம் என்று அழைக்கப்படுகிறது. அதன்படி, இந்தியாவிலும் இந்தச் சட்டத்தைக் கொண்டுவர வேண்டும் என்று வழக்கறிஞர் ஹார்ஷ் விபோல் சிங்கால் தன் மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில், லட்சக்கணக்கான 18 வயதுக்குட்பட்டவர்கள், பரஸ்பர ஒப்புதலின் அடிப்படையில் பாலியல் உறவில் ஈடுபடுகின்றனர். இந்தச் சூழலில், அதை குற்றமாகக் கருதி, ஆணுக்கு தண்டனை வழங்குவது பொருத்தமற்றதாக உள்ளது என்று அவர் தன் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.