லடாக் பயணம்: ராகுல் காந்திக்கு நன்றி தெரிவிக்கும் பாஜக அமைச்சர்கள்! – என்ன காரணம்?!

யூனியன் பிரதேசமான லடாக் பகுதிக்கு சென்றுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, அங்குள்ள பாங்காங் ஏரிக்கு பைக்கில் பயணித்தார். அவர் பைக்கில் பயணிக்கும் காட்சிகள் நேற்று முதல் சமூக வலைதளங்களில் செம வைரல். முன்னதாக ராகில் காந்தி கடந்த வியாழனன்று இரண்டு நாள் பயணமாகவே லே வந்தார். பின்னர் பாங்காங் ஏரி, நுப்ரா பள்ளத்தாக்கு மற்றும் கார்கில் மாவட்டத்தை உள்ளடக்கிய பகுதியில் மேலும் நான்கு நாள்கள் தங்கியிருக்க முடிவு செய்தார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்ட பிறகு முதல் முறையாக லடாக்கிற்கு வந்த ராகுல், லடாக்கின் தலைநகர் லே-வில் இளைஞர்களிடம் நேற்று கலந்துரையாடினார். பின்னர் லடாக்கின் பாங்காங் ஏரிக்கு நேற்று பைக்கில் பயணித்தார்.

ஒரு பக்கம், ராகுல் காந்தியின் லடாக் பைக் ரைடு, புகைப்படங்கள் வீடியோக்கள் வைரலாக, மத்திய அமைச்சர்களும் மூத்த பாஜக நிர்வாகிகளும் ராகுலுக்கு நன்றி தெரிவித்து வருகிறார்கள்.

மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு, 2012-ம் ஆண்டு லடாக்கில் எடுக்கப்பட்ட மோசமான சாலை வசதி கொண்ட வீடியோவையும் தற்போதைய ராகுல் காந்தி பயணிக்கும் நல்ல சாலைகளையும் ஒப்பிட்டு, “நரேந்திர மோடி அரசால் கட்டப்பட்ட லடாக்கின் சிறந்த சாலைகளை ஊக்குவித்ததற்காக ராகுல் காந்திக்கு நன்றி. முன்னதாக, காஷ்மீர் பள்ளத்தாக்கில் சுற்றுலா எவ்வாறு வளர்ந்து வருகிறது என்பதையும் அவர் காட்சிப்படுத்தினார், மேலும் ஸ்ரீநகரில் உள்ள லால் சவுக்கில் நமது `தேசியக் கொடி’ அமைதியாக ஏற்றப்படலாம் என்பதை நினைவூட்டினார்!” என பதிவிட்டுள்ளார்.

நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, “லே மற்றும் லடாக்கில் 370 வது பிரிவுக்கு பிந்தைய முன்னேற்றங்களை நேரில் பார்க்கவும் பரப்பவும், ராகுல் காந்தி அவர்களே பள்ளத்தாக்குக்கு பயணம் மேற்கொண்டிருக்கிறார். அவரது சாலை பயணத்தால் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்.” என்றார். மேலும் பல பாஜக நிர்வாகிகளும் ராகுலின் பயணம் பாஜக-வின் வளர்ச்சி பணிகளை மக்களுக்கு எடுத்துச் சொல்வதாக இருக்கிறது என பதிவிட்டு வருகிறார்கள்.!



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.