விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர் `பாக்கியலட்சுமி’. இந்தத் தொடருக்கென தனியொரு ரசிகர் பட்டாளமே இருக்கின்றது. இந்தத் தொடரில் அம்ரிதா கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருந்த ரித்திகா, தற்போது அந்தத் தொடரிலிருந்து விலகியிருக்கிறார்.

ரித்திகா, ‘குக்கு வித் கோமாளி’ நிகழ்ச்சியில் போட்டியாளராகப் பங்கேற்றவர். சமீபத்தில்தான் அவருக்கு வினு என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர் ‘பாக்கியலட்சுமி’ தொடரில் இரண்டாவது மருமகள் கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருந்தார். திருமணத்துக்குப் பிறகும் அவர் அந்தத் தொடரில் நடித்துக் கொண்டுதான் இருந்தார். தற்போது என்ன காரணம் எனத் தெரியவில்லை, அந்தத் தொடரிலிருந்து விலகியிருக்கிறார். அவர் மாறிய எபிசோடு இன்னமும் ஒளிபரப்பு ஆகவில்லை. அதனால், அந்த மாற்றம் குறித்து அவர் எந்த ஒரு விளக்கமும் இதுவரை அளிக்கவில்லை.
அவருக்குப் பதிலாக, அந்தக் கதாபாத்திரத்தில் ‘காற்றுக்கென்ன வேலி’ தொடரில் நடித்துக் கொண்டிருக்கும் அக்ஷிதா அசோக் நடிக்கிறார். அக்ஷிதா நெகட்டிவ் கேரக்டரில் பார்த்துப் பழக்கப்பட்ட முகம். அவர் இந்தத் தொடரில் அமைதியான பாசிட்டிவ் கேரக்டரில் நடிக்கவிருக்கிறார். சமீபத்தில் ‘பாக்கியலட்சுமி’ டீம் மொத்தமும் `ஜெயிலர்’ படத்திற்குச் சென்றிருக்கிறார்கள். அவர்களுடன் அக்ஷிதாவும் இணைந்திருக்கிறார். அந்தப் புகைப்படங்களும் சமூகவலைதள பக்கங்களில் வைரலாகப் பரவி வருகின்றன.

அக்ஷிதா மாறியுள்ள எபிசோடு விரைவில் ஒளிபரப்பாக இருக்கின்றது.