வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
நாளை மறுநாள் நிலவில் தரையிறங்க உள்ள, நிலவு தொடர்பான புதிய படங்களை அனுப்பி உள்ளதாக இஸ்ரோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த படங்கள் நிலை தரையிறக்கும் சரியான பகுதியை விஞ்ஞானிகள் முடிவு செய்வதற்கு பெரும் உதவியாக இருக்கும். இன்றைய 4 படங்கள் முக்கியத்துவம் வாய்ந்தது.
‘லேண்டர்’ சாதனத்தின் இரண்டாவது மற்றும் கடைசி துாரக் குறைப்பு நடவடிக்கை நேற்று வெற்றிகரமாக நடந்துள்ளது. இதையடுத்து, நிலவை தொட்டு விடும் துாரத்தில் லேண்டர் சாதனம் உள்ளது. ‘இஸ்ரோ’ எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு மையம், நிலவை ஆய்வு செய்வதற்காக, சந்திரயான் – 3 விண்கலத்தை ஜூலை 14ம் தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக செலுத்தியது.
இந்த விண்கலம் மூன்று பிரிவுகளை கொண்டதாகும். ‘புரபல்ஷன் மாட்யூல்’ எனப்படும் உந்து கலன், ‘லேண்டர்’ எனப்படும் நிலவில் தரையிறங்கும் சாதனம், ‘ரோவர்’ எனப்படும் நிலவில் ஆய்வு செய்யும் வாகனம் அடங்கியதே சந்திரயான் – 3 விண்கலமாகும்.
இதில் உந்து கலனுக்குள் லேண்டர் சாதனமும், லேண்டர் சாதனத்துக்குள் ரோவர் வாகனமும் இடம்பெற்றுள்ளன.
பூமியின் சுற்று வட்டப் பாதையில் இருந்து, கடந்த 5ம் தேதி நிலவின் சுற்று வட்டப் பாதைக்கு சந்திரயான் – 3 விண்கலம் செலுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, சந்திரயான் – 3 விண்கலத்தில் இருந்து விக்ரம் என்று பெயரிடப்பட்டுள்ள லேண்டர் சாதனம் தனியாக பிரிந்தது. பிரக்யான் என பெயரிடப்பட்டுள்ள ரோவர் வாகனத்தை சுமந்துள்ள விக்ரம் லேண்டர் சாதனம் தற்போது நிலவை சுற்றி வருகிறது.
நிலவில் இருந்து குறைந்தபட்சம் 25 கி.மீ., மற்றும் அதிகபட்சம் 134 கி.மீ., சுற்று வட்டப் பாதைக்குள் லேண்டர் சாதனம் நேற்று வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. நிலவில் இருந்து குறைந்தபட்சம் 30 கி.மீ., மற்றும் அதிகபட்சம் 100 கி.மீ., துாரத்தில் இருக்கும்போது லேண்டர் சாதனம் நிலைநிறுத்தப்பட உள்ளது. அதற்கேற்ப அதன் வேகம் குறைக்கப்பட்டுள்ளது.
நாளை மறுதினம் இந்த இலக்கை எட்டியதுடன், லேண்டர் சாதனத்தின் வேகம் மேலும் கட்டுப்படுத்தப்பட்டு, நிலவின் மேற்பகுதியில் மெதுவாக தரை இறக்க, இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டமிட்டு உள்ளனர்.
நாளை மறுதினம் ( ஆக-23) மாலை 5:45 மணிக்கு தரையிறக்கப்பட உள்ளதாக அறிவிக்கப் பட்டிருந்தது. தற்போது, மாலை 6:04 மணிக்கு தரையிறக்கப்பட உள்ளதாக இஸ்ரோ நேற்று தெரிவித்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement