சூப்பர் ஸ்டார் பட்டம் யாருக்கு?: ஆரம்பித்து வைத்த சரத்குமார்.. முடித்து வைத்த சத்யராஜ்..

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். தற்போதும் அவர் படங்களில் ஆக்டிவாக நடித்து வரும் நிலையில் கடந்த சில மாதங்களாகவே அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்கிற சர்ச்சை திரையுலகில் சிலரிடமும் சோசியல் மீடியாவில் இரு தரப்பு ரசிகர்களிடமும் ஓடிக்கொண்டிருக்கிறது. இதனால் சோசியல் மீடியாவில் முகம் சுளிக்கும் வகையில் இந்த சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கான சண்டை நடந்து வருகிறது.

தமிழ் திரையுலகை பொருத்தவரை ரஜினிகாந்த் பற்றி பேசினாலும் அல்லது அவருக்கு எதிராக மறைமுகமாக பேசினாலும் அதில் குறிப்பிடத்தக்க இரண்டு பேர் என்றால் ஒருவர் சரத்குமார். இன்னொருவர் சத்யராஜ்.. சில காரணங்களுக்காக சரத்குமார், ரஜினிக்கு எதிரான கருத்துக்களை கூறுவதற்காக மற்றவர்களை உயர்த்தி பிடிப்பார்.. ஆனால் சத்யராஜ் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் ரஜினியை விமர்சிக்க தவறுவதில்லை.

அப்படித்தான் கடந்த ஜனவரி மாதம் வாரிசு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றபோது அதில் கலந்துகொண்டு பேசிய சரத்குமார் அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் தான் என்று கூறி ஒரு புதிய சர்ச்சையை துவங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து சேனல்களிலும் சோசியல் மீடியாக்களிலும் இது குறித்து மிகப்பெரிய விவாதங்கள், ஆய்வுகள், வசூல் லாப நட்ட கணக்குகள் என கடந்த எட்டு மாதங்களாகவே ஒரு பரபரப்பு ஓடிக் கொண்டிருந்தது.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான ஜெயிலர் திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றி ரஜினி இன்னும் அசைக்க முடியாதபடி அந்த முதலிடத்தில் தான் இருக்கிறார் என்பதை தெளிவாக உணர்த்தி உள்ளது. இந்த நிலையில், தான் நடித்துள்ள அங்காரகன் என்கிற படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் சமீபத்தில் கலந்து கொண்ட சத்யராஜிடம் இந்த சூப்பர் ஸ்டார் சர்ச்சை குறித்து கேட்கப்பட்டது. வழக்கம் போல அவரும் ரஜினிக்கு எதிரான ஒரு கருத்தை தான் சொல்வார் என எதிர்பார்த்த நிலையில் சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினிகாந்த் தான் என்று கூறி ஆச்சரியத்தை ஏற்படுத்தினார்.

இதுபற்றி அவர் கூறும்போது, “சூப்பர் ஸ்டார் என்றாலே கடந்த 45 வருடமாக ரஜினி சார் தான் ஞாபகத்திற்கு வருகிறார்.. அதை மாற்றக்கூடாது.. என்னைப் பொறுத்தவரை சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினி சார்.. ஏழிசை மன்னர், மக்கள் திலகம், நடிகர் திலகம் என ஒவ்வொருவருக்கும் காலத்திற்கேற்ப பட்டங்கள் மாறினாலும் ஒவ்வொன்றுக்கும் ஒருவர் தான் சொந்தமானவர். ரஜினி சாரை மக்கள் திலகம் என்றால் ஏற்றுக் கொள்வார்களா ? தசாவதாரம் படத்தில் கமல் சார் சூப்பராக நடித்ததால் அவரை நடிகர் திலகம் என்று கூற முடியுமா ? சூப்பர் ஸ்டார் என்றால் ரஜினிகாந்த்.. உலக நாயகன் என்றால் கமல்.. தளபதி என்றால் விஜய்.. தல என்றால் அஜித்” என கூறி சமீப காலமாகவே ஓடிகொண்டிருந்த சூப்பர்ஸ்டார் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.