டாஸ்மாக் கடைகளில் விலைப் பட்டியல் உள்ளதா? – வழக்கறிஞர்கள் குழு ஆய்வுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரை: டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களின் விலைப் பட்டியல் வைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து வழக்கறிஞர்கள் குழு ஆய்வு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் மதுபான விற்பனை நேரத்தை குறைக்கக் கோரி உயர் நீதிமன்ற கிளையில் கே.கே.ரமேஷ் என்பவர் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், ‘மதுபான விற்பனை நேரத்தை பிற்பகல் 2 மணியிலிருந்து இரவு 8 மணி வரை என குறைக்க வேண்டும். 21 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மது விற்பனை செய்ய தடை விதிக்க வேண்டும். மது வாங்குவோருக்கு உரிய அடையாள அட்டை வழங்கவும் உத்தரவிட வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற அமர்வு, ‘பொது நலன் கருதி, மதுப் பழக்கத்துக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கையை குறைக்க மது விற்பனை நேரத்தை குறைக்கலாம். மதுவால் ஏற்படும் பாதிப்பு குறித்து பொதுமக்கள், மது அருந்துவோரிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

மதுப்பழக்கம் சமூகத்துக்குக் கேடானது. மது குடிப்பவர்களையும், அவர்களின் குடும்பத்தினரையும் பாதிக்கிறது. இதனால் மது வாங்குவோருக்கு அடையாள அட்டை வழங்கும் நடைமுறையை அமல்படுத்த வேண்டும். இந்த அட்டை வைத்துள்ளவர்களுக்கு மட்டுமே மதுபானங்களை டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்ய வேண்டும்.

மது பாட்டில்களில் ஒட்டப்பட்டிருக்கும் லேபிள்களில் விலை விவரம், புகார் தெரிவிக்க வேண்டிய எண் ஆகியவற்றை தமிழில் அச்சிட்டு ஒட்ட வேண்டும். மது விற்பனை நேரத்தை பிற்பகல் 2 முதல் இரவு 8 மணி வரையாக குறைக்க வேண்டும்’ என உத்தரவிட்டனர்.

இந்நிலையில், மது விற்பனை நேரத்தை குறைப்பது தொடர்பாக உயர் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி கே.கே.ரமேஷ் என்பவர் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், டி.பரதசக்கரவர்த்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், ‘டாஸ்மாக் கடைகளின் வெளியே மதுபானங்களின் விலைப் பட்டியல் வைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து உதவி சொலிசிட்டர் ஜெனரல் கோவிந்தராஜன் தலைமையிலான வழக்கறிஞர் குழு, மதுரை டாஸ்மாக் கடைகளில் நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும். விலைப் பட்டியல் இல்லாத டாஸ்மாக் கடைகளின் ஊழியர்கள் மீது போலீஸில் புகார் அளித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து அக்டோபர் 23-ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’ என உத்தரவிட்டனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.