டிஜிட்டல் இந்தியாவின் சிற்பி ராஜீவ் காந்தி – காங்கிரஸ் புகழாரம்

புதுடெல்லி,

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 79-வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, தலைநகர் டெல்லியில் உள்ள ராஜீவ் காந்தியின் நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

பின்னர் நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் உள்ள ராஜீவ் காந்தியின் உருவப்படத்துக்கு சோனியா காந்தி, கார்கே மற்றும் பிற தலைவர்கள் மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்வில் மாநிலங்களவை எம்.பி. கபில் சிபில், பா.ஜ.க. தலைவர் சுப்பிரமணியன் சுவாமி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

ராகுல் காந்தி மரியாதை

இதனிடையே லடாக் சென்றுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அங்கு பாங்காங் ஏரியின் கரையில் வைக்கப்பட்டிருந்த ராஜீவ் காந்தியின் திருவுருவப்படத்துக்கு மரியாதை செலுத்தினார்.

அதை தொடர்ந்து, ராகுல் காந்தி தனது தந்தை ராஜீவ் காந்தியை நினைவு கூர்ந்து, ‘எக்ஸ்’ (டுவிட்டர்) தளத்தில் வெளியிட்ட பதிவில், “அப்பா, இந்த விலை மதிப்பற்ற நினைவுகளிலிருந்து இந்தியாவைப் பற்றி நீங்கள் கண்ட கனவுகள் நிரம்பி வழிகின்றன. உங்கள் அடிச்சுவடுகளே என் வழி. அது, பாரத தாயின் குரலை கேட்கும் ஒவ்வொரு இந்தியனின் போராட்டங்களையும், கனவுகளையும் புரிந்துகொள்வது” என குறிப்பிட்டுள்ளார்.

உண்மையான தேசபக்தர்

அதேபோல் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ராஜீவ் காந்திக்கு மரியாதை செலுத்தும் விதமாக டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் கூறியதாவது:-

பாரத ரத்னா ராஜீவ் காந்தியின் பிறந்தநாளில், அவருக்கு இதயப்பூர்வமான மரியாதை செலுத்துவதன் மூலம் அவரது ஒப்பற்ற பங்களிப்பை நினைவுகூருகிறோம்.

பிரதமராக தனது சிறப்பான செயல்பாட்டின் மூலம், அவர் உலகின் தலைசிறந்த தலைவர்களில் ஒரு இடத்தை பெற்றுள்ளார். 21-ம் நூற்றாண்டின் இந்தியாவை உருவாக்குவதில் ராஜீவ் ஒரு தனித்துவமான பங்கை கொண்டிருந்தார். ராஜீவ் காந்தி இந்தியாவின் சிறந்த மகன். கோடிக்கணக்கான இந்தியர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்திய தலைவர். உண்மையான தேசபக்தருக்கு தலை வணங்குகிறோம்.

டிஜிட்டல் இந்தியாவின் சிற்பி

ராஜீவ் காந்தி டிஜிட்டல் இந்தியாவின் சிற்பி ஆவார். அவரது தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப புரட்சி மற்றும் கணினி மயமாக்கல் திட்டம் இந்தியாவை உலகின் முன்னணி நாடுகளில் நிற்க வைத்தது. கோடிக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்தது.

வாக்களிக்கும் வயதை 18 வயதாக குறைத்தல், நீடித்த அமைதி ஒப்பந்தங்கள், உலகளாவிய நோய்த்தடுப்பு திட்டம் மற்றும் உள்ளடக்கிய கற்றலுக்கு முக்கியத்துவம் அளிக்கும் புதிய கல்வி கொள்கை போன்ற அவரது எண்ணற்ற தலையீடுகள் நாட்டில் மாற்றங்களை ஏற்படுத்தியது.

இவ்வாறு கார்கே கூறினார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.