பாஜக எம்.பி. சன்னி தியோலின் பங்களா ஏல அறிவிப்பை திரும்பப் பெற்ற பேங்க் ஆஃப் பரோடா: காங்கிரஸ் கேள்வி

புதுடெல்லி: நடிகரும் பாஜக எம்.பி.யுமான சன்னி தியோலின் ஜூஹூ பங்களா மின் ஏல அறிவிப்பை பாங்க் ஆஃப் பரோடா திரும்பப் பெற்றுள்ளது. இந்த நிலையில் இதுகுறித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன.

மேற்கு மும்பை பகுதியில் இருக்கும் ஜூஹூவில் உள்ள நடிகரும், பாரதிய ஜனதா கட்சியின் எம்.பி.,யுமான சன்னி தியோலின் பங்களாவை, அவர் பெற்ற கடனுக்காக ஏலம் விடுவதாக பாங்க் ஆஃப் பரோடா அறிவித்திருந்தது.

கடந்த 2022 ஆம் ஆண்டு பெற்ற சுமார் ரூ.56 கோடி கடனைத் திரும்பப் பெறும் வகையில் ஆக.25-ம் தேதி பங்களாவை ஏலம் விடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

முன்னதாக, சன்னி வில்லா என்று அறியப்படும் ஜூஹூ பங்களா ஏலத்தொகை ரூ.51.43 கோடிக்கு தொடங்கும் என்று வங்கி ஞாயிற்றுக்கிழமை அறிவித்திருந்தது. ஆரம்பத் தொகை ரூ.5.14 கோடியாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், தேசிய வங்கியான பாங்க் ஆஃப் பரோடா வங்கி, திங்கள் கிழமை வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், “அஜய் சிங் தியோல் என்ற சன்னி தியோலின் பங்களாவை ஏல விற்பனை அறிவிப்பு தொழில்நுட்ப காரணங்களால் திரும்பப் பெறப்படுகிறது” என்று தெரிவித்துள்ளது.

வங்கியின் இந்த அறிப்பு குறித்து காங்கிரஸ் கட்சி தொழிநுட்ப காரணத்தைத் தூண்டியது யார் என்று கேள்வி எழுப்பியுள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் ஊடக பிரிவு பொதுச் செயலாளர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “பாஜக எம்.பி. சன்னி தியோல் பாங்க் ஆஃப் பரோடாவுக்கு செலுத்த வேண்டிய ரூ.56 கோடி கடனை திருப்பி செலுத்தாததால் அவரது ஜூஹூ பங்களா மின் ஏலத்தில் விடப்பட இருக்கிறது என்று நேற்று மதியம் (ஞாயிற்றுக்கிழமை) இந்த தேசம் அறிந்திருந்தது.

இன்று (திங்கள் கிழமை) காலையில், 24 மணி நேரத்துக்குள் தொழில்நுட்ப காரணங்களால் பாங்க் ஆஃப் பரோடா தனது ஏல அறிப்பை திரும்பப் பெற்றிருப்பதை இந்த தேசமே அறிகிறது. இந்த தொழில்நுட்ப காரணத்தை தூண்டியது யார் என்று ஆச்சரியமாக இருக்கிறதா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

ஏல அறிவிப்பு திரும்பப் பெறப்பட்டதுக்கு பிஎஸ்ஆர் கட்சியைச் சேர்ந்தவரும், தெலங்கானா மாநில புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டுத்துறை தலைவருமான ஒய் சத்தீஸ் ரெட்டி எதிர்வினையாற்றியுள்ளார். அதன் எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில், “24 மணி நேரத்துக்குள்:-பாஜக எம்.பி சன்னி தியோல் செலுத்த வேண்டிய ரூ.55 கோடி கடன் தொகைக்காக, அவரது பங்களாவை ஏலம் விடப்போவதாக பாங்க் ஆஃப் பரோடா அறிவித்திருந்தது. உடனடியாக அறிவிப்பை திரும்பப் பெற்றுள்ளது. அதற்கு வசதியாக தொழில்நுட்ப காரணம் என்று தெரிவித்துள்ளது” என்று கூறியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.