புதுடெல்லி: பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று தென்னாப்பிரிக்கா செல்கிறார்.
பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய 5 நாடுகள் கூட்டமைப்பு ‘பிரிக்ஸ்’ (BRICS) எனப்படுகிறது. இதன் தலைமை பொறுப்பை தற்போது தென்னாப்பிரிக்கா வகிப்பதால், அந்நாட்டின் ஜோகன்னஸ்பர்க் நகரில் 15-வது பிரிக்ஸ் மாநாடு இன்று தொடங்கி24-ம் தேதி வரை நடக்கிறது.
அந்நாட்டு அதிபர் சிரில் ரமபோசா அழைப்பின்பேரில் இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று தென்னாப்பிரிக்கா செல்கிறார். சீன அதிபர் ஜி ஜின்பிங், பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா ஆகியோரும் இதில் கலந்து கொள்கின்றனர். உக்ரைன் போர் காரணமாக ரஷ்ய அதிபர் புதினை கைது செய்ய சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் வாரன்ட் பிறப்பித்துள்ளதால், அவர் காணொலி வாயிலாக பங்கேற்கிறார்.
மாநாட்டின்போது இந்திய பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்தித்து பேசுவார்கள் என்று கூறப்படுகிறது.
கிரீஸ் பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிஸ் அழைப்பின்பேரில் பிரதமர் மோடி வரும் 25-ம் தேதி அந்த நாட்டுக்கு செல்கிறார். கடந்த 40 ஆண்டுகளில் இந்திய பிரதமர் ஒருவர் கிரீஸ் செல்வது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.