புதுடில்லி, வெங்காய விலையை கட்டுப்படுத்தவும், உள்நாட்டு வினியோகத்தை அதிகரிக்கவுமே ஏற்றுமதிக்கு 40 சதவீத வரி விதிக்க முடிவு செய்ததாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நடப்பு நிதியாண்டில் ஏப்., 1 முதல் ஆக., 4 வரையிலான காலகட்டத்தில், 9.75 லட்சம் டன் வெங்காயம் நம் நாட்டில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
விலை உயர்வு
வங்கதேசம், மலேஷியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளுக்கு அதிகம் ஏற்றுமதியாகி உள்ளன.
இதையடுத்து, உள்ளூர் சில்லரை விற்பனை சந்தையில் வெங்காய விலை படிப்படியாக உயர துவங்கியது.
இதன் காரணமாக, வெங்காய ஏற்றுமதிக்கு 40 சதவீத வரி விதித்து மத்திய அரசு கடந்த 19ம் தேதி உத்தரவிட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மஹாராஷ்டிராவின் நாசிக்கில் உள்ள விவசாயிகள் மற்றும் வர்த்தகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நாசிக்கில் உள்ள ஏ.பி.எம்.சி., எனப்படும் விவசாய விளை பொருள் சந்தை கமிட்டியில், வெங்காய ஏலத்தை காலவரையின்றி நிறுத்தி வைக்க வர்த்தகர்கள் முடிவு செய்துள்ளனர்.
மத்திய அரசின் இந்த முடிவு குறித்து, மத்திய நுகர்வோர் விவகாரத்துறை செயலர் ரோஹித் குமார் சிங் கூறியதாவது:
புதுடில்லியில் வெங்காய விலை கிலோ 40 ரூபாயை தொட்டது. கடந்த இரண்டு நாட்களில், கிலோ 25 ரூபாய் என்ற மானிய விலையில் 2,500 டன் வெங்காயம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
வினியோகம்
புதுடில்லி, தெலுங்கானா, ஆந்திரா, ஹிமாச்சல பிரதேசம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில், உபரி கையிருப்பாக இருக்கும் வெங்காயத்தை அரசு வினியோகித்து வருகிறது.
எனவே, வெங்காய ஏற்றுமதிக்கு 40 சதவீத வரி விதிப்பு, முன்கூட்டியே எடுக்கப்பட்ட முடிவல்ல. உள்நாட்டு கையிருப்பை அதிகரிக்கவும், சில்லரை விற்பனை விலையை கட்டுக்குள் வைக்கவும் சரியான நேரத்தில் சிந்தித்து எடுக்கப்பட்ட முடிவு.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்