சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் படம் பெரிய அளவில் ஹிட்டாகி இருக்கிறது. இதனால் ரஜினிகாந்த், இமயமலை, ஜார்க்கண்ட் உட்பட வடமாநிலத்திற்கு ஆன்மிக சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
அப்போது லக்னோ சென்று உத்தர பிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத்துடன் சேர்ந்து ஜெயிலர் படத்தைப் பார்த்தார். படத்தின் சிறப்புக் காட்சியை காண ரஜினிகாந்த் மனைவி லதா ரஜினிகாந்தும் சென்றிருந்தார். இதையடுத்து ரஜினிகாந்த் உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் இல்லத்திற்குச் சென்று யோகி ஆதித்யநாத் காலைத் தொட்டு வணங்கினார். இதுதொடர்பான வீடியோ பெரும் பேசுபொருளாகியொருந்தது. ரஜினியின் இந்தச் செயலைப் பலரும் விமர்சித்திருந்தனர்.

இந்நிலையில் தனது 10 நாள் ஆன்மிகப் பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பிய ரஜினிகாந்த் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர். அப்போது பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த ரஜினி, “நான்கு ஆண்டிற்குப் பிறகு ஆன்மிக பயணம் சென்றது மனதிற்கு சந்தோஷமாக இருந்தது.
‘ஜெயிலர் படத்தை மாபெரும் வெற்றிப் படமாக்கிய என்னை வாழவைத்த தெய்வங்களான தமிழ் மக்களுக்கும், உலகத்தில் இருக்கும் அனைத்து மக்களுக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எவ்வளவு பணம் செலவானாலும் பரவயில்லை ஒரு நல்ல படத்தை எடுக்க வேண்டும் என்று ஊக்குவித்த சன் பிக்சர்ஸ் கலாநிதிமாறன் அவர்களுக்கும், ஒவ்வொரு சீனையும், ஒவ்வொரு பிரேமையும் ரசிச்சு ரசிச்சு இயக்கிய இயக்குநர் நெல்சன் அவர்களுக்கும்,
திறமையாகப் பணியாற்றிய அனைத்து கலை மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களுக்கும், நடிகர்களுக்கும், ஒரு வெற்றிப் படத்தை நல்ல பாடல்களாலும், சிறந்த பின்னணி இசையாலும் பிரமாண்ட வெற்றிப்படமாக்கிய அனிருத் என படக்குழுவினர் அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகள்.

உத்தர பிரதேச துணை முதல்வர் படம் பார்க்க வேண்டும் என்றார் அதனால் அங்கு சென்று அவர்களுடன் படம் பார்த்தேன். இது நட்பு ரீதியான ஒரு சந்திப்புதான். இதில் அரசியல் ஏதுமில்லை” என்றார்.
மேலும், யோகி ஆதித்யநாத்தின் காலில் விழுந்தது பற்றி பேசியவர், “ஒரு சந்நியாசியாக இருக்கட்டும், யோகியாக இருக்கட்டும் அவர்கள் நம்மைவிட சின்ன வயதுகொண்டவர்களாக இருந்தாலும் அவர்கள் காலில் விழுவது என்னுடைய பழக்கம். அதைத்தான் நான் செய்தேன்” என்று விளக்கமளித்தார்.