இஸ்லாமாபாத்:பாகிஸ்தானில், இரண்டு முக்கிய சட்ட திருத்த மசோதாக்களில் அதிபர் ஆரிப் ஆல்வி கையொப்பமிட்டதாக குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து, சர்ச்சையில் இருந்து தப்பிக்க, தன் செயலரை அவர் பதவி நீக்கம் செய்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நம் அண்டை நாடான பாகிஸ்தானில் கடந்த ஆண்டு, முன்னாள் பிரதமர் இம்ரான் கான் அரசின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டதை அடுத்து, அவர் பதவி விலகினார். இதையடுத்து, ஷெபாஸ் ஷெரீப் பிரதமராக பதவியேற்றார்.
இவரது ஆட்சிக் காலம் நிறைவடைவதற்கு சில நாட்கள் முன், அந்நாட்டு பார்லி., கலைக்கப்பட்டதை அடுத்து, இடைக்கால பிரதமராக அன்வர் உல்ஹக் கக்கார் பதவி வகித்து வருகிறார்.
இந்நிலையில், பார்லி., கலைக்கப்படுவதற்கு முன், அந்நாட்டு ராணுவத்துக்கு கூடுதல் அதிகாரம் வழங்கும் அரசு ரகசிய சட்ட திருத்த மசோதா மற்றும் பாகிஸ்தான் ராணுவ சட்ட திருத்த மசோதா ஆகியவை, அதிபர் ஆரிப் ஆல்வியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த இரு மசோதாக்களுக்கும் ஒப்புதல் அளிக்காத அதிபர், அவற்றை திருப்பி அனுப்பியதாக கூறப்படுகிறது.
ஆனால், மசோதாக்களுக்கு அவர் ஒப்புதல் அளித்ததாக, அந்நாட்டு ஊடகங்கள் சமீபத்தில் செய்தி வெளியிட்டன. இதை அதிபர் ஆரிப் ஆல்வி மறுத்துள்ளார்.
அந்த மசோதாக்களில் அவர் கையெழுத்திடவில்லை என்றும், குறிப்பிட்ட காலத்திற்குள் அவற்றை திருப்பி அனுப்பும்படி தன் அலுவலக ஊழியர்களிடம் தெரிவித்ததாகவும் அவர் கூறினார்.
இந்நிலையில், இந்த தவறுக்கு தன் செயலர் வக்கார் அகமது தான் பொறுப்பு என கூறிய அதிபர் ஆல்வி, அவரை பதவி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
இந்த நடவடிக்கையை கண்டித்து முன்னாள் செயலர் வக்கார் அகமது அதிபருக்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளார்.
அதில், ‘என்னுடைய பதவி நீக்கம் நீதியின் அடிப்படையில் செய்யப்படவில்லை. எனவே அதை மறுபரிசீலனை செய்யவேண்டும்’ என, குறிப்பிட்டுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக, முறையான விசாரணை நடத்தி உண்மையான குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதற்கிடையே, இந்த சர்ச்சையில் இருந்து தப்பிக்கும் நோக்கத்தில் அதிபர் ஆரிப் ஆல்வி தன் செயலரை பதவி நீக்கம் செய்ததாக பாக்., ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்