மண்டியாவில் பா.ஜனதா போராட்டம்

மண்டியா:

தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்கப்பட்டதை கண்டித்து மண்டியாவில் பா.ஜனதாவினர் போராட்டம் நடத்தினர். இதில் சாலை மறியலில் ஈடுபட்டதுடன் டயருக்கு தீவைத்த போராட்டக்காரர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.

கோர்ட்டில் வழக்கு

கர்நாடகம்-தமிழகம் இடையே காவிரி நீர் பங்கீட்டு கொள்கைபடி நீர் பங்கிடப்பட்டு வருகிறது. ஆனால் அவ்வப்போது தண்ணீரை பங்கிட்டு கொள்வதில் இரு மாநிலங்கள் இடையே பிரச்சினை ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஆகஸ்டு வரை தமிழகத்திற்கு 52 டி.எம்.சி. (ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி) நீரை கர்நாடகம் காவிரியில் திறந்திருந்த வேண்டும். ஆனால் போதிய மழை பெய்யாததால் கர்நாடக அணைகளில் நீர் குறைவாக இருப்பு உள்ளது. இதனால் பெங்களூரு, மண்டியா, மைசூரு, ராமநகர் மாவட்ட மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியாத நிலை உள்ளது.

இதனால் தமிழகத்திற்கு கர்நாடகம் தண்ணீர் திறந்துவிடாமல் இருந்தது. தென்மேற்கு பருவமழை ஓரளவு பெய்ததை தொடர்ந்து கர்நாடகத்தில் காவிரி படுகையில் உள்ள கபினி, கே.ஆர்.எஸ். அணைகளில் இருந்து சுமார் 5 ஆயிரம் கனஅடி நீர் திறந்துவிடப்பட்டு வந்தது. ஆனால் இந்த நீர் போதாது எனவும், கர்நாடகம் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய 52 டி.எம்.சி. நீரை திறக்க உத்தரவிடக் கோரியும் சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு கடந்த 14-ந் தேதி வழக்கு தாக்கல் செய்தது.

வினாடிக்கு 22 ஆயிரம் கனஅடி நீர்

இதைத்தொடர்ந்து கர்நாடக அணைகளில் இருந்து கடந்த 6 நாட்களாக வினாடிக்கு 22 ஆயிரம் கனஅடிக் கும் மேல் காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இதற்கு கர்நாடக அரசியல் கட்சியினர், விவசாய மற்றும் கன்னட அமைப்பினா் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

மேலும் மாநில அரசை கண்டித்து பா.ஜனதா, ஜனதாதளம்(எஸ்) கட்சியினர், விவசாய அமைப்பினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

மண்டியாவில் போராட்டம்

இந்த நிலையில் தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடுவதை கண்டித்து மண்டியாவில் போராட்டத்துக்கு பா.ஜனதா அழைப்பு விடுத்தது. அதன்படி நேற்று மண்டியாவில் பா.ஜனதாவினர் போராட்டம் நடத்தினர். மண்டியா டவுன் சஞ்சய் சர்க்கிள் பகுதியில் நடந்த போராட்டத்தில், மண்டியா எம்.பி. சுமலதா, முன்னாள் மத்திய மந்திரி சதானந்தகவுடா, முன்னாள் மந்திரி அஸ்வத்நாராயண், தேஜஸ்வி சூர்யா எம்.பி. உள்பட பலர் கலந்துகொண்டனர். அப்போது மாநில அரசுக்கு எதிராக அவர்கள் கோஷம் எழுப்பினர்.

மேலும், ‘இந்தியா’ கூட்டணியில் தி.மு.க. அங்கம் வகிப்பதால் மாநிலத்தின் நலனை காங்கிரஸ் கட்சி தியாகம் செய்துள்ளதாகவும் கோஷம் எழுப்பினர். கர்நாடக அரசை கண்டித்து பதாகைகளையும் வைத்திருந்தனர். மாநில அரசு மக்களை முட்டாளாக்குவதாக கூறி காதில் பூ வைத்து போராட்டக்காரர்கள் தங்கள் எதிர்ப்பை நூதன முறையில் வெளிப்படுத்தினர். மைசூரு, மண்டியா, ராமநகர் மாவட்ட விவசாயிகளின் நலனை கர்நாடக அரசு புறக்கணித்து வருவதாக குற்றம்சாட்டினர்.

விரைவுச்சாலையில் மறியல்

இதேபோல், பெங்களூரு-மைசூரு தேசிய நெடுஞ்சாலையிலும் பா.ஜனதாவினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் சாலையில் டயர்களை கொளுத்திப்போட்டும், மாநில அரசின் உருவப்பொம்மையை எரித்தும் தங்கள் எதிர்ப்பை ெவளிப்படுத்தினர். மேலும் பா.ஜனதாவினர் சாலையில் உருண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது போலீசார் அவர்களை தடுக்க முயன்றனர். இதனால் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தினார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த போராட்டத்தைெயாட்டி விரைவுச்சாலை மற்றும் மண்டியா டவுனில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

அரசியல் கண்ணோட்டத்தில்…

முன்னதாக மண்டியாவில் நடந்த போராட்டத்தில் சுமலதா எம்.பி. பேசியதாவது:-

இந்த போராட்டத்தை யாரும் அரசியல் கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டாம். நமது விவசாயிகளின் உரிமை மற்றும் நலன்களை நாம் பாதுகாக்க வேண்டும். நாம் கன்னடர்களாக ஒற்றுமையாக இருந்து கர்நாடகத்தின் நலனை பாதுகாக்க வேண்டும்.

மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது, காவிரி விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை சுட்டிக்காட்டி தண்ணீர் திறக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்போது மத்திய மந்திரியாக இருந்த அம்பரீஷ், தனது பதவியை ராஜினாமா செய்தார். கர்நாடக விவசாயிகளுக்கு அநீதி ஏற்பட நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.