வீராங்கனை உதட்டில் முத்தமிட்ட ஸ்பெயின் கால்பந்து சங்க தலைவர்.. சர்ச்சை கிளம்பியதால் மன்னிப்பு கேட்டார்

சிட்னி,

9-வது பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் சிட்னியில் நேற்று முன்தினம் இரவு நடந்த இறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் அணி 1-0 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை தோற்கடித்து முதல்முறையாக உலகக் கோப்பையை உச்சிமுகர்ந்தது. பரிசளிப்பு விழாவின் போது ஸ்பெயின் வீராங்கனைகளின் கழுத்தில் தங்கப்பதக்கம் அணிவிக்கப்பட்டது. பரிசளிப்பு விழா மேடையில் நின்ற ஸ்பெயின் கால்பந்து சங்க தலைவர் லூயிஸ் ருபியாலெஸ் சில வீராங்கனைகளை கட்டிப்பிடித்து பாராட்டினார்.

முன்கள வீராங்கனை ஜெனிபர் ஹெர்மோசாவை இறுக்கி அணைத்ததுடன் உதட்டில் முத்தமிட்டார். இதனால் அதிர்ச்சிக்குள்ளான அந்த வீராங்கனை சிறிது நேரத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ‘ருபியாலெஸ் நடந்து கொண்ட விதம் எனக்கு பிடிக்கவில்லை’ என்று பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இதனால் இது சர்ச்சையாக வெடித்தது. ருபியாலெசை கடுமையாக விமர்சித்த ஸ்பெயின் நாட்டு விளையாட்டுத்துறை மந்திரி மிக்யூல் இஸ்ட்டா, சமத்துவத்துறை மந்திரி ஐரினே மோன்டேரோ ஆகியோர், அவர் நடந்து கொண்ட விதத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. மன்னிப்பு கேட்க வேண்டும்’ என்று கண்டித்தனர்.

இதையடுத்து சில மணி நேரத்திற்கு பிறகு ஹெர்மோசா சார்பில் ஸ்பெயின் கால்பந்து சங்கம் அறிக்கை ஒன்றை தயாரித்து வெளியிட்டது. அதில், ‘உலகக் கோப்பையை வென்ற எல்லையற்ற மகிழ்ச்சியில் திடீரென இயல்பாக நடந்த விஷயம் அது. எனக்கும் சங்க தலைவர் ருபியாலெசுக்கும் இடையே நல்ல உறவு உள்ளது. வீராங்கனைகளிடம் எப்போதும் அவர் கண்ணியமுடன் நடந்து கொள்வார்’ என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் முத்த விவகாரத்தால் பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியதால் ஸ்பெயின் கால்பந்து சங்க தலைவர் ருபியாலெஸ் நேற்று மன்னிப்பு கோரினார். இது குறித்து அவர் கூறுகையில், ‘நான் செய்தது முற்றிலும் தவறு என்பதை ஒப்புக் கொள்கிறேன். உற்சாகம், பரவசத்தின் வெளிப்பாடாக இவ்வாறு நடந்து கொண்டேனே தவிர இதில் உள்நோக்கம் இல்லை. என்றாலும் ஹெர்மோசாவிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். ஒரு கால்பந்து சங்க தலைவராக இருக்கும்போது மிகவும் கவனமுடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதை புரிந்து கொள்கிறேன். இது எனக்கு ஒரு பாடமாகும்’ என்றார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.