வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஜோஹன்ஸ்பெர்க்: பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக தென் ஆப்ரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி, அங்கு மாநாட்டில் பங்கேற்ற நாட்டு தலைவர்கள் குழு புகைப்படம் எடுக்கும் நிகழ்வின்போது, கீழே இருந்த இந்திய தேசிய கொடியை காலில் படாமல் கவனமாக அதனை எடுத்து பையில் வைத்து பத்திரப்படுத்தினார். இந்த வீடியோ வைரலாகியுள்ளது.
பிரிக்ஸ் அமைப்பில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கின்றன. இந்த அமைப்பின், 15வது உச்சி மாநாடு, ஆப்ரிக்க நாடான தென் ஆப்ரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் நேற்று (ஆக.,22) துவங்கியது. இந்த மாநாட்டில் அங்கம் வகித்துள்ள நாடுகளின் தலைவர்கள் குழு புகைப்படம் எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக தென் ஆப்ரிக்க அதிபர் சிரில் ரமபோசா மற்றும் இந்திய பிரதமர் மோடி ஆகியோர் முதலாவதாக மேடையில் ஏறினர்.
அப்போது தலைவர்கள் நிற்கும் இடத்தை குறிப்பிடும் வகையில் கீழே அந்தந்த நாட்டு தேசிய கொடிகளை வைத்திருந்தனர். இதனை பார்த்த பிரதமர் மோடி, தேசிய கொடி காலில் படாதவாறு குனிந்து அதனை எடுத்து தனது பையில் பத்திரமாக வைத்துக்கொண்டார்.
இதனை பார்த்த தென் ஆப்ரிக்க அதிபர் சிரில் ரமபோசா, தான் மிதித்திருந்த தங்கள் நாட்டு கொடியை எடுத்து அதிகாரிகளிடம் கொடுத்தார். அப்போது மோடியிடமும் கொடியை அதிகாரிகளிடம் கொடுக்குமாறு கூறினார். அதற்கு மறுத்து பிரதமர் மோடி, இந்திய தேசிய கொடியை தனது பையிலேயே பத்திரமாக இருக்கட்டும் எனக்கூறி வைத்துக்கொண்டார்.
மோடியின் இந்த செயல் மற்ற நாட்டு தலைவர்களுக்கும் முன்னுதாரணமாக அமைந்தது. தேசியக்கொடி மீதான மரியாதையை பிரதமர் அளித்திருக்கும் இந்த வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement