புதுடில்லி, கண்ணுக்கு தெரியாத தொலைவில் உள்ள இலக்கை, அஸ்த்ரா ஏவுகணை வாயிலாக தாக்கும் தேஜஸ் போர் விமானத்தின் சோதனை முயற்சி வெற்றிகரமாக நடந்துள்ளது.
உள்நாட்டு தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ள, தேஜஸ் என பெயரிடப்பட்டுள்ள இலகு ரக போர் விமானம், பல்வேறு சோதனைகளில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறது.
இதன் அடுத்தகட்டமாக, கண்ணுக்கு தெரியாத தொலைவில் உள்ள இலக்கை, உள்நாட்டில் தயாரிக்கப்பட்டுள்ள அஸ்த்ரா ஏவுகணை வாயிலாக தாக்கும் சோதனை முயற்சி நேற்று நடந்தது.
கோவா கடற்கரைக்கு அருகே, 20,000 அடி உயரத்தில் பறந்த தேஜஸ் போர் விமானம், திட்டமிட்ட இலக்கை துல்லியமாக தாக்கியது.
விமானவியல் மேம்பாட்டு முகமை உள்ளிட்ட உயர் அதிகாரிகள், விஞ்ஞானிகள் முன்னிலையில் இந்த சோதனை நடத்தப்பட்டது.
இந்த சோதனை முயற்சி வெற்றிகரமாக முடிந்ததற்கு, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்துள்ளார்.
‘தேஜஸ் போர் விமானத்தின் திறனை வெளிப்படுத்துவதாக இந்த சோதனை அமைந்துள்ளது.
‘மேலும், ஏவுகணை உள்ளிட்ட ஆயுதங்களுக்கு வெளிநாடுகளை சார்ந்திருக்காமல் உள்நாட்டிலேயே உருவாக்க முடியும் என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது’ என, சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் அவர் கூறியுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement