புதுடில்லி: நிலவின் தென் பகுதியை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்டுள்ள, சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர் சாதனம் இன்று(ஆக.,23) மாலை 6:04 மணிக்கு வெற்றிகரமாக தரையிறக்க இஸ்ரோ விஞ்ஞானிகள் முழு முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வை காண்பதற்காக உலக நாடுகள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். இஸ்ரோ முயற்சி வெற்றி அடைய விஞ்ஞானிகள், அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இஸ்ரோ முன்னாள் தலைவர் மாதவன் நாயர்
மிகச்சிறந்த தருணத்தை அனைவரும் ஆர்வமுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்திய விண்வெளி திட்டங்களில் இது முக்கியமான ஒன்றாக உள்ளது. கடைசி 20 நிமிடங்கள் மிகவும் முக்கியமானதாக இருக்கும்.

விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை
இதுவரை சிறப்பாக நடந்துள்ளது. நமது திட்டப்படி இன்று மாலை நிலவில் சந்திரயான்3 நிலவில் தரையிறங்க முடியும். அனைவரை போல் நானும் ஆர்வமாக உள்ளேன். சந்திரயான் -1 மூலம் நிலவில் தண்ணீர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, உலக நாடுகள் நிலவை வேறு மாதிரியாக பார்க்க துவங்கிவிட்டன.

இஸ்ரோ முன்னாள் இயக்குநர் சுரேந்திர பால்
இஸ்ரோ விஞ்ஞானிகள் போல், நானும் நம்பிக்கையில் உள்ளேன். சந்திரயான்- 2 விண்கலத்தை காட்டிலும் தற்போது ஏராளமான மாற்றங்களை செய்துள்ளோம். தரையிறங்கும் நிலப்பரப்பு 2.5 கி.மீ., இருந்து 4 கி.மீ., ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

விண்வெளி வீரர், பேராசிரியர் டாக்டர் ஆர்சி கபூர்
உலக நாடுகளும், பல விண்வெளி அமைப்புகளும் சந்திரயான்-3 கவனித்து வருகின்றன. உலகில் மிகச்சிறந்த விண்வெளி அமைப்புகளில் இஸ்ரோவும் ஒன்று. நிலவில் மெதுவாக தரையிறங்குவோம் என்ற நம்பிக்கை உள்ளது. இதன் மூலம், நிலவில் மெதுவாக தரையிறங்கும் 4வது நாடு இந்தியா என்ற பெருமை கிடைக்கும்.

மத்திய அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா
பிரதமர் மோடி தலைமையில் நாடு இருக்கும்போது, நிலவில் இந்தியக் கொடியை ஏற்றி புதிய சாதனை படைக்கப்பட உள்ளது. இந்த தருணத்திற்காக ஒட்டுமொத்த நாடும் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கிறது. கடந்த 9 ஆண்டுகளாக அரசு மற்றும் விஞ்ஞானிகள் எடுத்த முயற்சிக்கு இன்று பலன் கிடைக்க உள்ளது. வெற்றியை நோக்கி நாம் நகர்ந்து வருகிறோம். இதன் மூலம் இந்தியா புதிய சாதனை படைக்க உள்ளது.

முன்னாள் பிரதமர் தேவகவுடா
சந்திராயன்- 3 வெற்றிக்காக இஸ்ரோவை பாராட்டுவதில் இந்தியர்களுடன் நானும் சேர்ந்து கொள்கிறேன். உலக தரத்திலான விஞ்ஞானிகளை கொண்ட இஸ்ரோ, பல ஆண்டுகளாக நம்மை பெருமைப்படுத்தி வருகிறது. அவர்களின் சாதனை, உலகில் இந்தியாவை முன்னிலைப்படுத்தி உள்ளது. நமது நாட்டையும், விஞ்ஞானிகளையும் கடவுள் ஆசீர்வதிக்கட்டும்.

ம.பி., முதல்வர் சிவராஜ் சிங் சவுகான்
நாடு பெருமைப்படுகிறது. விஞ்ஞானிகளுக்கு எனது மனதில் இருந்து வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். பிரதமர் மோடி தலைமையில், நாடு ஏராளமான சாதனைகளை படைத்துள்ளது.

ஆர்எஸ்எஸ் அமைப்பின் சுனில் அம்பேத்கர்
இந்தியாவின் சந்திரயான்-3 திட்டம் நமக்கு மிகவும் முக்கியமானது. நமது விஞ்ஞானிகள் நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளனர். விஞ்ஞானிகளுக்கு பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன். இந்த திட்டம் வெற்றிகரமாக செயல்படும் என்ற நம்பிக்கை உள்ளது.

திக்விஜய் சிங்
சந்திரயான் விண்கலத்தை நிலவில் மெதுவாக தரையிறக்க போகும் விஞ்ஞானிகளை நினைத்து பெருமைப்படுகிறோம். இது வெற்றிகரமாக நடக்க வேண்டி கொள்கிறோம். இந்த திட்டத்தில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானிகளுக்கு 17 மாதமாக சம்பளம் வழங்கப்படவில்லை என செய்தி வருகிறது. இது குறித்து பிரதமர் கவனம் செலுத்த வேண்டும்.

உ.பி., துணை முதல்வர் பிரஜேஷ் பதக்
சந்திரயான் -3 நிலவில் மெதுவாக தரையிறங்குவதற்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். இதனை பார்க்க ஒட்டு மொத்த நாடும் எதிர்பார்த்து கிடக்கிறது. பிரதமர் மோடி தலைமையில் ஒவ்வொரு துறைகளிலும் வளர்ச்சி பெற்று வருகிறது.

காங்கிரஸ் கட்சியின் உதித்ராஜ்
சந்திரயான் – 3 மெதுவாக தரையிறங்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இதன் மூலம் நமது நோக்கம் நிறைவேறும். இதற்காக விஞ்ஞானிகள் கடுமையாக உழைத்துள்ளனர்.

தென் இந்தியாவிற்கான ரஷ்ய கவுன்சில் ஜெனரல் ஒலெக் அவ்தீவ்
நிலவின் சந்திரயான் – 3 தரையிறங்க உள்ளது. இந்தியாவில் ஒவ்வொருவரும் இதனை ஆர்வமுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். சந்திரயான் – 3 நிலவில் தரையிறங்குவதை பார்க்க அனைவரும் பெரிய எதிர்பார்ப்புடன் உள்ளனர். நானும் ஆர்வமாக உள்ளேன்.
பிரார்த்தனை
சந்திரயான் 3 விண்கலம் வெற்றி பெற பல மாநிலங்களில் கோயில்களில் பூஜை மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடந்தன.
மஹாராஷ்டிர மாநிலம் புனேயில் உள்ள சித்தி விநாயகர் கோயிலில் சிவசேனா கட்சியினர் பிரார்த்தனையில் ஈடுபட்டனர். ஸ்ரீகணேஷ் மந்தீரில் தேசியவாத காங்கிரசார் ஹோமம் நடத்தினர்.
ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.
உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வாரில் உள்ள மாதா வைஷ்ணவி தேவி கோயிலில் சிறப்பு பூஜை நடந்தது.
ராஜஸ்தானின் அஜ்மீர் ஷரீப் தர்காவிலும் பிரார்த்தனை நடந்தது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்