சந்திரயான் 3 வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்த அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ்

வாஷிங்டன்,

நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோவால் அனுப்பப்பட்ட சந்திரயான் 3 விண்கலம் 41 நாட்கள் பயணம் செய்து இலக்கை அடைந்து விட்டது. விண்கலத்தில் இணைக்கப்பட்டிருந்த விக்ரம் லேண்டர் நேற்று மாலை 6.04 மணிக்கு வெற்றிகரமாக நிலவில் தரையிறக்கப்பட்டது. மிகவும் சவாலான இந்தப் பணிகளை பெங்களூரு தரை கட்டுப்பாட்டுத் தளத்தில் இருந்து விஞ்ஞானிகள் மிகுந்த சாதுர்யமாக நடத்தி முடித்தனர்.

இஸ்ரோ விஞ்ஞானிகளின் இந்த அயராத பணிகள் உலக நாடுகளின் பாராட்டுகளை பெற்றுள்ளது. நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கிய விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் வெளியேற்றத்தை விஞ்ஞானிகள் மேற்கொண்டனர். அவர்களின் சீரிய முயற்சியால் லேண்டரின் வயிற்றுப் பகுதியில் இருந்த ரோவர் சில மணி நேரங்களில் வெளியேறி நிலவின் தரைப்பகுதியில் தடம் பதித்தது.

இந்நிலையில், நிலவின் தென் துருவப் பகுதியில் வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திரயான் 3 விண்கலம் தரையிறங்கியதற்கு அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கமலா ஹாரிஸ், தனது சமூக வலைதள பதிவில், “சம்பந்தப்பட்ட அனைத்து விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களுக்கு இது ஒரு நம்பமுடியாத சாதனையாகும். விண்வெளி ஆய்வில் உங்களுடன் பங்குதாரர்களாக இருப்பதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்” என பதிவிட்டுள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.