மத்திய மாகாணத்தில் நிலவும் நீர் பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை

கடும் வறட்சியால் மத்திய மாகாணத்தில் நிலவும் நீர் பிரச்சினை சம்பந்தமாகவும், குடிநீரை எவ்வாறு தடையின்றி வழங்குவது தொடர்பிலும் விசேட கலந்துரையாடலொன்று நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் நடைபெற்றுள்ளது.

கண்டியிலுள்ள மத்திய மாகாண ஆளுநரின் அலுவலகத்தில் அவரின் பங்கேற்புடன் நடைபெற்ற இக்கூட்டத்தில், கடும் வறட்சியால் கண்டி, நுவரெலியா மாவட்டங்களுக்கு குடிநீரை வழங்குவதில் உள்ள இடர்பாடுகள் பற்றி ஆராயப்பட்டுள்ளன.

அத்துடன், கண்டியில் எசல பெரஹரா உற்சவம் ஆரம்பமாகியுள்ளது, ஆசிய விளையாட்டு போட்டியும் நடைபெறவுள்ளது. எனவே, கண்டி நகர் மற்றும் அதனை அண்மித்துள்ள கிராமங்கள் மற்றும் தோட்டங்களுக்கு தடையின்றி குடிநீரை வழங்குவதற்கான முகாமைத்துவ பொறிமுறை பற்றியும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

அத்துடன், நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு தடையின்றி குடிநீர் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதன்போது உறுதியளிக்கப்பட்டுள்ளது.

இதற்காக வேண்டி, நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை அதிகாரிகள், கண்டி மற்றும் நுவரெலியா மாநகரசபைகளின் அதிகாரிகள் அடங்கிய குழுவொன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவால் விரைவில் அறிக்கை கையளிக்கப்படும் என்றும் அமைச்சர் ஜீவன் தொண்டமான் தனது முகநுல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.