முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் எம்.எஸ் தோனி தன் வாழ்க்கையில் கிரிக்கெட்டை தாண்டி பல பரிணாமங்களில் தன்னை நிரூபித்து வருகிறார். அவர் விளம்பர நடிகர், தொழில்முனைவோர், பைக் ரைடர், இந்திய பிராந்திய ராணுவத்தில் ஒரு கௌரவ லெப்டினன்ட் கர்னல் , ஒரு தகுதிவாய்ந்த பாராட்ரூப்பர் மற்றும் தற்போது புதிதாக திரைப்பட தயாரிப்பாளர் என பல அவதாரங்களை எடுத்து வருகிறார். இது அனைத்தையும் தாண்டி முக்கியமாக கூறவேண்டுமென்றால் தோனி, விவசாயியாகவும் உள்ளார்.

தன் சொந்த ஊரான ராஞ்சியில் சுமார் 40 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். ஆனால் தோனி திடீரென விவசாயியாக மாறியதன் காரணத்துக்கான பதிலை ஒரு அரிய வீடியோ நேர்காணலில் அவர் கூறியுள்ளார். சமூகவலைதளத்தில் உலா வரும் அந்த வீடியோவில் பேசியுள்ள எம்.எஸ், “நான் ஒரு சிறிய நகரத்தை சேர்ந்தவர், சிறு வயதில் இருந்தே விவசாயத்துக்கும் எனக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. விவசாயம் எனக்கு புதிது கிடையாது.
விவசாயத்தை பொறுத்தவரை நாங்கள் கோவிட் பரவலுக்கு முன்பாகவே தொடங்கிவிட்டோம். ஆனால் அப்போதெல்லாம் 4 முதல் 5 ஏக்கர் நிலத்தில்தான் விவசாயம் செய்துவந்தோம். கோவிட் தொற்றின் போது என் கையில் அதிக நேரம் இருந்தது, அதை பயனுள்ளதாக எப்படி செலவழிப்பது என யோசித்தபோதுதான், நான் முழு நேர விவசாயியாக மாறினேன். ஒரு பயிரை வளர்க்கும் செயல்முறை மிகவும் கவர்ச்சிகரமானதாக இருப்பதை நான் உணர்ந்துள்ளேன். இரவில் நீங்கள் பார்க்கும் சிறிய வெண்டைக்காய், காலையில் எழுந்து பார்த்தால் முழு அளவில் வளர்ந்திருக்கும். இதுபோன்ற உற்பத்தி நிகழ்வுகள்தான் விவசாயத்தில் என்னை மேலும் உற்சாகப்படுத்தியது” என சுவாரஸ்சியமாக பேசியுள்ளார்.
தோனி தன் தோட்டம், தான் விவசாயம் செய்வது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவ்வபோது சமூகவலைத்தளத்தில் பகிர்ந்து வருவார். அப்படி நீண்ட நாள்களுக்கு முன்பு அவர் தன் ஸ்ட்ராபெர்ரி பயிர்களின் வீடியோவை பகிர்ந்து அதனுடன், ‘ நான் தொடர்ந்து பண்ணைக்குச் சென்றால் சந்தைக்கு ஸ்ட்ராபெர்ரி எதுவும் இருக்காது’ என நகைச்சுவையாக குறிப்பிட்டிருந்தார். இது இணையத்தில் பெரும் வைரலானது.