வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஏதென்ஸ்: பிரிக்ஸ் அமைப்பின் மாநாட்டில் பங்கேற்றுவிட்டு கிரீஸ் நாட்டிற்கு சென்ற பிரதமர் மோடிக்கு வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தென்னாப்பிரிக்காவின் ஜோஹன்ஸ்பர்க் நகரில் பிரிக்ஸ் அமைப்பின் 15வது மாநாடு இரு நாட்கள் நடந்தது. இதில் பங்கேற்க கடந்த 22ம் தேதி பிரதமர் மோடி, தென்னாப்பிரிக்கா சென்றார். மாநாட்டின் போது சீன அதிபர் ஜி ஜிங்பிங்கை சந்தித்து பேசினார். மாநாடு நிறைவடைந்ததையடுத்து தென்னாப்பிரிக்காவிலிருந்து விமானம் மூலம் கிரீஸ் நாட்டிற்கு சென்றார்.

கிரீஸ் சென்றுள்ள மோடியை வரவேற்க எதென்ஸ் நகரில் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் பதாகைகளுடன் காத்திருந்தனர். மோடியை பார்த்ததும் அவர்கள் ‘பாரத் மாதா கி ஜெய்’ என கோஷமிட்டு வரவேற்றனர். விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து அவர் டாம்ப் எனும் இடத்தில் உள்ள போர் வீரர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.

பின்னர் கிரீஸ் அதிபர் கத்ரீனா என்.சகெல்லரோபவுலோவை சந்தித்த பிரதமர் மோடி, சந்திரயான்-3 வெற்றி குறித்து பகிர்ந்துள்ளார். மோடி பேசுகையில், ‘சந்திரயான்-3 வெற்றி இந்தியாவிற்கான வெற்றி மட்டுமல்ல, ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கான வெற்றி. சந்திரயான்-3 திட்டத்தில் சேகரிக்கப்படும் தரவுகளின் முடிவுகள் ஒட்டுமொத்த அறிவியல் சகோதரத்துவத்திற்கும் மனித குலத்திற்கும் உதவும்’ என்றார். இதனை தொடர்ந்து கிரீஸ் நாட்டின் பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகியை சந்தித்து பேசுகிறார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement