சந்திரயான்-3-ன் ரோவர் லேண்டரில் இருந்து நிலவின் மேற்பரப்பில் இறங்கிய வீடியோ – இஸ்ரோ வெளியீடு

பெங்களூரு: சந்திரயான்-3ன் ரோவர் லேண்டரில் இருந்து நிலவின் மேற்பரப்பில் இறங்கிய வீடியோவை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.

நிலவை ஆய்வு செய்யும் நோக்கில் இந்தியா அனுப்பிய சந்திரயான்-3 விண்களம் கடந்த 23ம் தேதி நிலவை அடைந்தது. அன்று மாலை 6 மணி அளவில் விண்களத்தின் லேண்டர் நிலவில் கால் பதித்ததை அடுத்து, அதில் இருந்து ரோவர் வெளியே வந்து நிலவின் மேற்பரப்பில் இறங்கியது. இதையடுத்து, சந்திரயான்-3 விண்களத்தை பத்திரமாக நிலவில் தரையிறக்கும் இஸ்ரோவின் முயற்சி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், லேண்டரில் இருந்து ரோவர் வெளியேறி நிலவின் மேற்பரப்பில் இறங்கும் வீடியோவை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. அதோடு, ரோவர் வெளியேறுவதற்கு முன்பாக எடுக்கப்பட்ட நிலவின் மேற்பரப்பு குறித்த வீடியோவையும் இஸ்ரோ வெளியிட்டுள்ளது.

— ISRO (@isro) August 25, 2023

முன்னதாக, இஸ்ரோ நேற்று வெளியிட்ட அறிவிப்பில், ‘அனைத்து செயல்பாடுகளும் திட்டமிட்டபடி நடந்து வருகின்றன. லேண்டர், ரோவர் கலன்களின் இயக்கம், அதில் உள்ள கருவிகளின் செயல்பாடுகள் சீராக உள்ளன. லேண்டரில் உள்ள ராம்பா, இல்சா, சாஸ்டே ஆகிய ஆய்வுக் கருவிகளும் இயங்கத் தொடங்கின. ரோவர் வாகனம் நிலவில் நல்ல முறையில் நகர்ந்து செல்கிறது. அதேபோல, நிலவின்சுற்றுப்பாதையில் வலம் வரும் உந்துவிசை கலனில் உள்ள ஷேப் எனும் சாதனம் கடந்த 20-ம் தேதி முதல் தனது ஆய்வுப் பணியை செய்துவருகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக இஸ்ரோ விஞ்ஞானிகள் சிலர் கூறியதாவது: லேண்டர் கலன், நிலவில் தரையிறங்கிய இடத்தில் இருந்தபடியும், ரோவர் வாகனம், நிலவின் மேற்பரப்பில் நகர்ந்து சென்றும் ஆய்வு செய்யும். இதற்காக லேண்டரில் 4, ரோவரில் 2 என மொத்தம் 6 வகை கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. லேண்டரில் உள்ள ராம்பா, இல்சா, சாஸ்டே சாதனங்கள் மூலம் நிலவில் மேற்பரப்பு வெப்பம், நில அதிர்வுகள், அயனி கூறுகள் பரிசோதனை செய்யப்படும்.

லேண்டரில் உள்ள நாசாவின் எல்ஆர்ஏ (லேசர் ரெட்ரோ ரிஃப்ளக்டர் அரே) எனும் கருவி, பிரதிபலிப்பான் தொழில்நுட்பத்தை கொண்டது. அது லேசர் கற்றைகளை பிரதிபலித்து பூமிக்கும், நிலவுக்குமான தூரத்தை துல்லியமாக கணிக்கும்.

ரோவர் வாகனம் தனது 6 சக்கரங்கள், சோலார் பேனல் உதவியுடன் நிலவின் மேற்பரப்பில் விநாடிக்கு ஒரு செ.மீ. வேகத்தில் நகர்கிறது. இது தனது பாதையில் தென்படும் பொருட்களை ஸ்கேன் செய்து, தரவுகளை அனுப்பும். அதில் உள்ள ஏபிஎக்ஸ்எஸ் எனும் கருவி நிலவின் மேற்பரப்பில் லேசர் கற்றைகளை செலுத்தி, அதன்மூலம் வெளியாகும் ஆவியை கொண்டு நிலவின் மணல் தன்மையை ஆய்வு செய்யும். லிப்ஸ் கருவி ஆல்பா கதிர் மூலம் தரைப் பகுதியில் 10 செ.மீ.வரை துளையிட்டு மெக்னீசியம், அலுமினியம் போன்ற தனிமங்களை கண்டறிந்து, தகவல்களை லேண்டருக்கு அனுப்பும்.

ரோவரின் பின்பக்க சக்கரங்களில் அசோக சக்கர சின்னம், இஸ்ரோவின் ‘லோகோ’ பொறிக்கப்பட்டுள்ளது. நிலவில் ரோவர் ஊர்ந்து செல்லும் பகுதிகளில் இதன் அச்சு பதியும். நிலவில் காற்று இல்லாததால், இந்த தடம் அழியாது.

லேண்டர், ரோவர் ஆகியவை 14 நாட்கள் வரை ஆய்வு செய்யும். 2 வாரம் முடிந்ததும் நிலாவில் இரவு வந்துவிடும். இரவு நேரத்தில் அங்கு மைனஸ் 200 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை இருக்கும். சோலார் மின்சக்தியை நம்பியுள்ள ரோவர்,லேண்டரால் அந்த உறைபனியில் இயங்க முடியாது. 2 வாரங்கள் நீடிக்கும் தொடர் உறைபனியால் அவை செயலிழக்க வாய்ப்புஉள்ளது. எனினும், அதற்கு முன்பாக லேண்டர், ரோவர் அனுப்ப உள்ள தரவுகள்தான் நிலவை பற்றிய புதிய பரிமாணத்தை வழங்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.