வாஷிங்டன், தேர்தல் முறைகேடு வழக்கில், அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் குற்றவாளி என ஜார்ஜியா நீதிமன்றம் தீர்ப்பளித்ததை தொடர்ந்து, புல்டன் கவுன்டி சிறையில், டொனால்டு டிரம்ப் நேற்று சரணடைந்தார். 22 நிமிடங்கள் சிறையில் இருந்த அவர், ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
அமெரிக்க அதிபராக, குடியரசு கட்சியைச் சேர்ந்த டொனால்டு டிரம்ப், 77, கடந்த 2017 – 21 வரை பதவி வகித்தார். 2020 நவ., மாதம் நடந்த அதிபர் தேர்தலில், ஜனநாயக கட்சி வேட்பாளரும், தற்போதைய அதிபருமான ஜோ பைடன் முறைகேடாக வெற்றி பெற முயற்சிப்பதாக டொனால்டு டிரம்ப் குற்றஞ்சாட்டினார்.
தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருந்த போது, டிரம்ப் வெளியிட்ட பல கருத்துகளால், இரு கட்சிகளுக்கு இடையே பயங்கர மோதல் ஏற்பட்டு வன்முறையாக வெடித்தது.
இறுதியில், தேர்தல் முடிவுகள் வெளியாகி, ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் அதிபராக பொறுப்பேற்றார்.
கடந்த 2021, ஜன., 2ம் தேதி, ஜார்ஜியா மாகாண அமைச்சர் பிராட் ராபன்ஸ்பெர்கர் உடன், டொனால்டு டிரம்ப் பேசிய தொலைபேசி உரையாடல் வெளியானது. அதில், ‘பைடனை முந்துவதற்கு, 11,780 ஓட்டுகளை தேட முயலுங்கள்’ என டிரம்ப் பேசியிருந்தார்.
இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தேர்தல் முடிவுகளை மாற்ற முயற்சித்தது உட்பட, 13 பிரிவுகளில் டிரம்ப் உட்பட அவரது ஆதரவாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. வழக்கு விசாரணையின் முடிவில்,டிரம்ப் குற்றவாளி என, ஜார்ஜியாவின் புல்டன் கவுன்டி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
போலீசிடம் சரணடைய நேற்று கடைசி நாள் என்பதால், ஜார்ஜியா தலைநகர் அட்லான்டாவில் உள்ள புல்டன் கவுன்டி சிறையில், டொனால்டு டிரம்ப் நேற்று சரணடைந்தார். கைதிகள் சிறைக்குள் வந்ததும் கடைப்பிடிக்கப்படும் அனைத்து நடவடிக்கைகளும் டிரம்புக்கும் கடைப்பிடிக்கப்பட்டன.
அவரை, ‘மக் ஷாட்’ எனப்படும் பல்வேறு கோணங்களில் புகைப்படங்கள் எடுக்கப்பட்டன. அப்போது டிரம்புக்கு, பி01135809 என்ற கைதி எண் அளிக்கப்பட்டது.
அவரது உயரம், எடை, அங்க அடையாளங்களை போலீசார் பதிவு செய்தனர். டொனால்டு டிரம்ப், 6 அடி, 3 அங்குல உயரமும், 97 கிலோ எடையும் இருந்தார். இளம் பொன் நிற தலைமுடியும், நீல நிறக் கண்களும் உள்ளதாக போலீசார் பதிவு செய்தனர்.
சிறையில், 22 நிமிடங்கள் இருந்த டிரம்ப், 1.60 கோடி ரூபாய் சொந்த ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
ஜார்ஜியாவில் இருந்து அவர் நியூஜெர்சிக்கு விமானத்தில் புறப்படுவதற்கு முன், செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இது அமெரிக்காவுக்கு மிகவும் சோகமான நாள். நடந்து முடிந்த அதிபர் தேர்தல் மோசடியான தேர்தல்; திருடப்பட்ட தேர்தல். அதை எதிர்த்து சவால் விடும் முழு உரிமையும் எனக்கு இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
சிறையில் எடுக்கப்பட்ட மக் ஷாட் புகைப்படங்களை, எக்ஸ் சமூக வலைதளத்திலும், தன் சொந்த சமூக வலைதளமான, ‘ட்ரூத் சோஷியல்’ தளத்திலும் அவர் பதிவிட்டார்.
அதில், ‘தேர்தல் குறுக்கீடுகள்: ஒரு போதும் சரணடையாதே’ என குறிப்பிட்டுள்ளார். இதே வாசகங்களை தான், தேர்தல் வன்முறைகள் வெடித்த போது, 2021, ஜன., 8ம் தேதி அவர் குறிப்பிட்டு இருந்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்