நாட்டில் கடும் வறட்சி நிலவும் நிலையில், குடிநீர் தேவையை அத்தியாவசிய அவசர நிலையாகக் கருதி, தடையின்றி குடிநீரை வழங்குவதற்கான கூட்டு வேலைத்திட்டமொன்றை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இவ்வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்காக குழுவொன்றும் அமைக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் ஜீவன் தொண்டமானின் கோரிக்கைக்கமைய பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில், நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் நடைபெற்ற கூட்டதின்போதே இது தொடர்பில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி நீர்வழங்கல், நீர்பாசனம், பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுகள் இணைந்தே இக்கூட்டு வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளன.
நாட்டில் நிலவும் கடும் வறட்சியால் குடிநீரை பெறுவதில் உள்ள சிக்கல்கள், சுகாதாரமான நீரை வழங்குவதில் உள்ள நெருக்கடிகள் பற்றி ஆராயப்பட்டு அது தொடர்பில் கருத்துகளும் பெறப்பட்டன. காத்திரமான சில முடிவுகளும் எடுக்கப்பட்டுள்ளன.